திங்கள், 1 ஜூன், 2009

நோக வைக்கும் 50 காசு பிரச்சினை

தமிழகத்திலே குறிப்பாக சென்னையில் ஓடக்கூடிய பேருந்துகளின் நடத்துனர்களுக்கு பயணிகளிடம் நடந்து கொள்ளும் விதம் குறித்து சிறப்புப் பயிற்சி கொடுப்பார்கள் போலிருக்கிறது. அவருகிட்ட வாயக்குடுத்தோமுன்னா சகதியில கல்லெறிஞ்ச மாதிரி ஆகிப்போய் விடும் பயணிகள் நிலை. அதிலும் சாதா பேருந்துகளை விட தாழ்தளம், தங்கரதம் போன்ற சொகுசுப் பேருந்துகளில், பேரூந்துகள் மட்டும் தான் மார்டனாக இருக்கிறது. ஆனால் அதில் பணிபுரியும் நடத்துனர்கள் கீழ்தளம் தான் அதாவது எந்த மட்டத்துக்கும் இறங்கி வந்து சண்டையிடக்கூடிய வல்லமை படைத்தவர்களாக விளங்குகிறார்கள். 

காலையில்  10 மணிக்குத் தொடங்கும் அலுவலகத்திற்கு போக வேண்டுமானால் 6 மணிக்கு கிளம்பினால் தான் சரியான நேரத்திற்குப் போய் சேரக்கூடிய நிலையில் இருக்கிறது.சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசல். உக்கார இடமில்லாமல் லாரியிலே ஏற்றிய புளி மூட்டை போல அடுக்கப்பட்டு,படிய வாரிய தலைகள் கலைந்து இரண்டாம் குளியலாக ஒரு வேர்வைக்குளியலே முடித்து இவ்வளவு கஷ்டப்பட்டு பயணம் செய்யும் போது அங்கே நடத்துனர்களின் ஏச்சு பேச்சுகளையும் சமாளிக்க வேண்டியிருக்கிறது. அது கூடப் பரவாயில்லை, முன்னால் 2 ரூபாய் இருந்த சாதாரண பேருந்துகளின் கட்டணம் சத்தமேயில்லாமல் வெள்ளை போர்டுக்கு மஞ்சல் பெயிண்டு அடித்து 2.50 என மாற்றப்பட்டது. அதே போல 3 ரூபாய் கட்டணம் 3.50 என மாற்றப்பட்து. இதிலே என்ன கொடுமையின்னா 5 ரூபாய் கொடுத்து 3.50 டிக்கெட் கேட்டால் அதற்கு மீதி சில்லரை வருவது 1 ரூபாய் தான். அவ்வளவு கூட்டத்திலும் சிலர் அதைப் பற்றி கேட்டுவிட்டால் வருமே கோபம் நடத்துனருக்கு. 

இருய்யா! உன் 50 காச வச்சி நான் என்ன கோட்டையா கட்டப் போறேன், இப்படி பேசுற ஆளு கரெக்டா சில்லறை கொண்டுவரனும், நல்ல வந்துட்டானுங்க பேசுறதுக்கு அதுவும் வேனாமுன்னா ஆட்டோவில் போகவேண்டியது தானே, நீங்க வரலைன்னு யாரு அழுதா? இல்லாட்டி உன்னய கையப்புடிச்சி இழுத்து ஏத்துறேனா என ஏகத்துக்கும் எழும் குரல்கள். இதற்கு பதில்குரல் கொடுத்தால் வண்டி உடணடியாக நிறுத்தப்படும் அல்லது காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப் படும். பிரச்சினைகளை விரும்பாத நடுத்தரவர்க்கத்தினர் அதற்கு மேல துணிந்து பேசுவது இல்லை. காரணம் காவல்துறையிலே சென்றால் அங்கே இதைவிடக்கேவலமாக நடத்துவார்கள் என்பது அவர்களுக்கும் தெரியாதா என்ன? இது போல அவர்கள் ஒரு நாளைக்கு ஒரு ரூபாய் அதாவது போக 50 காசு வர 50 காசு என தேவையில்லாமல் இழக்கிறார்கள். உன் 50 காச வச்சி நான் என்ன கோட்டையா கட்டப்போறேன் என கேட்கும் நடத்துனர்கள் 500 பேருகிட்ட 50 காச போட்டா ஒரு நாளைக்கு 250 ரூபா அப்ப மாசத்துக்கு 7500/ ரூபா. ஆக சம்மந்தமே இல்லாம ஒரு மாச சம்பளக்காசு சும்மா கிடைக்குது. அப்ப இதுக்கு பேர் என்ன? 50 காசு என்பது பலருக்கு பெரிய மதிப்பாக இல்லாவிட்டாலும் பட்ஜெட்டில் வண்டியை ஓட்டுபவர்களுக்கு அதுதான் முக்கியப் பிரச்சனை. வேலை தேடுபவர்கள், தினக்கூலிகள் போன்றோர் இதனால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதும் உண்மை.   

அதுமட்டுமல்லாம‌ சமீபகாலமாக விருந்தினருக்கு மரியாதை செய்வோம் அப்டின்னு தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்யப்படுகிறது, விருந்தினர்கள் என்பது வெளி நாட்டு சுற்றுலா பயணிகள். அவர்கள் ஆசைப்பட்டு சென்னை மாநகரப்பேருந்துகளில் ஏறுவார்கள்.ஆனால் அந்த சுற்றுலாப் பயணிகளிடம் கூட நடத்துனர்கள் கணிவாக நடந்துகொள்வதில்லை. அதே வா, போ தான். ஆனால் அவர்கள் எல்லோரிடமும் நிச்சயமாக கணிவாக நடந்துகொள்ள இயலாது. காரணம் மண்ணின் மைந்தர்கள் செய்யும் அட்டகாசங்களுக்கு அள்வே இல்லை. விசத்தை விசத்தால் தான் முறிக்க வேண்டும் என்பது போல அவர்களை அவர்கள் வழியிலே அடித்தால் தான் அடங்குவார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை. ஆனால் அதே நேரம் பயணிகளிடம் மிகக்கணிவாக நடந்துகொள்ளும் நடத்துனர்களும் உண்டு. 

ஒரு சமயம் ஒரு பேரூந்தில் நான் பயணம் செய்த நேரத்தில் நல்ல முறையில் பயணிகளிடம் பேசிவந்த நடத்துனர் திடீரென ஒரு நிறுத்தம் வந்ததும் பயணிகளை மிகக் கடுமையாக சாட ஆரம்பித்தார்.படியருகே நிற்பவர்களை உள்ளே செல்லுமாறு விரட்டினார். நல்லா பேசிக்கிட்டு வந்தவரு திடீரென இப்படி மாறியதைக் கண்டு பயணிகள் கொஞ்சம் திகைத்துத் தான் போனார்கள்.ஒரு நிறுத்தம் வந்ததும் சிலர் இறங்கிய பின் பேரூந்திலே கூட்டம் குறைந்தது. பேரூந்து நகர ஆரம்பித்தது. உடனே நடத்துனர் அருகே நின்ற ஒருவரிடம் சார்! போயிட்டான் சார். அவனுக்கு தினம் இதே பொழப்பா போச்சி. பாக்கெட் அடிக்கிறதும், சைன் அறுக்குறதும் தான் அவனுக்கு தொழிலே. அந்த நேரம் நான் இப்படித் தான் பயணிகளை உசார் பண்ண வேண்டி இருக்குது. நம்மள தப்பா நெனச்சா நெனச்சிட்டு போறாங்க, நாலு பேரோட பொருளக் காப்பாத்துன மனத்திருப்தி இருக்கு சார் என்றார். 

நான் கூட முதலில் அவரைத் தவறாக நினைத்துவிட்டேன், பின்னர் அவர் சொன்னதைக்கேட்டு எனக்கே பூரிப்பாய் இருந்தது. ஆக இதுபோன்ற நல்ல உள்ளம் கொண்டவர்களும் இருக்கிறார்கள் என்பதையும் நாம் மறுக்க முடியாது. இந்தப் பதிவைப் படிக்கும் நபர்களில் ஒருவேளை நடத்துனர்கள் அல்லது போக்குவரத்துத் துறை அதிகாரிகள் இருக்கலாம். தயவுகூர்ந்து மேற்கண்ட விசயங்களை கொஞ்சம் பரிசீலித்தால் நன்றாக இருக்கும். 

இந்த பிரச்சினை குறித்து பதிவு கோரியிருந்த பெயர் வெளியிட விரும்பாத‌ அந்த நண்பருக்கு நன்றி. மன்னிக்கவும் கொஞ்சம் தாமதமானதற்கு.இனி தாமதம் ஆகாது. உங்களுக்கும் ஏதாவது பிரச்சினை அதாவது பொதுப்பிரச்சினை இருந்தால் நீங்களும் நம்ம மெயிலுக்கு கடிதம் எழுதலாமே!

10 கருத்துகள்:

கலையரசன் சொன்னது…

நோக வைக்கும் அருமையான கட்டுரை..
நீங்க ஒரு நடமாடும் நூலகம் பாஸ்!

டாஸ்மாக் கபாலி சொன்னது…

//கலையரசன் கூறியது...
நோக வைக்கும் அருமையான கட்டுரை..
நீங்க ஒரு நடமாடும் நூலகம் பாஸ்!//

நண்பா கலையரசா! வஞ்சப்புகழ்சியணி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இப்போது தான் பார்க்கிறேன். புகழ்சியிலே வஞ்சமிருக்கலாம்,ஆனால் வஞ்சமே புகழ்சியாகி விடக்கூடாது.

ஸ்ரீ.... சொன்னது…

நடத்துனர்கள் பற்றிய அருமையான பதிவு.

ஸ்ரீ....

வண்ணத்துபூச்சியார் சொன்னது…

அருமை.

நானும் சென்னை ரவுண்ட் அப் என்று சில பதிவுகளை இட வேண்டும் என்று நினைத்தேன்.

அதில் முதலில் பேருந்துகளை பற்றியதுதான்.

நிறைய புதிய இளைஞர்கள் நடத்துனராக வந்துள்ளது தெரிகிறது. சிலருக்கு இன்னும் பக்குவமில்லை. எரிச்சலுடன் பதில் சொல்கிறார்க்ள்.

அவர்கள் சங்கடமும் சொல்லி மாளாது..

ஒட்டுநர்கள் பாடும் திண்டாட்டம்.

ஆனால் முழுக்க முழுக்க பேருந்துகளை நம்பியிருக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானதிற்கு காரணம் அடாவடி ஆட்டோகாரர்கள் தான்.

கிண்டியிலிருந்து தி.நகர் செல்ல {5- 6கி.மீ} வாய் கூசாமல் 120 - 150 ரூபாய் கேட்கிறார்கள். இது தமிழகம் முழுவதும் தொற்று வியாதி போல் பரவி விட்டது.

முன்பெல்லாம் மீட்டருக்கு சூடு என்பார்கள். திமுக ஆட்சிக்கு வந்ததும் மீட்டரை கழட்டி போட்டு விட்டு சும்மா ஜில்லுன்னு சுற்றி வருகிறார்கள்.

கிடைக்க வேண்டியது கிடைத்து விடுவதால் எத்தனை கமிஷனர் இடம் மாறினாலும் எதையும் கண்டு கொள்ள போவதில்லை..

துணை முதல்வராவது ஏதாவது செய்வார் என்று நம்பிக்கையுள்ளது.

பார்ப்போம்.

பெயரில்லா சொன்னது…

திருநேல்வேல்லியில் போயி பார்க்கவேண்டும் நடத்துனரின் வேலை எவ்வளவு கடினம் என்று எவ்வளவு கூட்டம் இருந்தாலும் வாய்தவறி ஒருவார்த்தை தவறாக பேசமுடியாது பேசினால் அந்தபேருந்த்தில் இருக்குக்கும் அத்தனை பேருமே நடத்துனரை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவார்கள் .இது என் அனுபவம்

malar சொன்னது…

ungkal email id

டாஸ்மாக் கபாலி சொன்னது…

//ஸ்ரீ.... கூறியது...
நடத்துனர்கள் பற்றிய அருமையான பதிவு.//

வருகைக்கு நன்றி சார்.

டாஸ்மாக் கபாலி சொன்னது…

// வண்ணத்துபூச்சியார் கூறியது...
அருமை.

நானும் சென்னை ரவுண்ட் அப் என்று சில பதிவுகளை இட வேண்டும் என்று நினைத்தேன்.

அதில் முதலில் பேருந்துகளை பற்றியதுதான்.

நிறைய புதிய இளைஞர்கள் நடத்துனராக வந்துள்ளது தெரிகிறது. சிலருக்கு இன்னும் பக்குவமில்லை. எரிச்சலுடன் பதில் சொல்கிறார்க்ள். //

பூச்சியாரே! இப்பமட்டும் என்ன கொறஞ்சா போச்சி, நீங்களும் ஒரு பதிவப்போடுங்க. அப்பவாவது ஒரு 4 பேரு திருந்துறாங்களான்னு பாப்போம்

டாஸ்மாக் கபாலி சொன்னது…

//பெயரில்லா கூறியது...
திருநேல்வேல்லியில் போயி பார்க்கவேண்டும் நடத்துனரின் வேலை எவ்வளவு கடினம் என்று எவ்வளவு கூட்டம் இருந்தாலும் வாய்தவறி ஒருவார்த்தை தவறாக பேசமுடியாது பேசினால் அந்தபேருந்த்தில் இருக்குக்கும் அத்தனை பேருமே நடத்துனரை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவார்கள் .இது என் அனுபவம்//

தின்னெல்வேலி அல்வாவுக்கு மட்டுமல்ல அனானி சார் அருவாவுக்கும் பேமஸு தானே!

டாஸ்மாக் கபாலி சொன்னது…

// malar கூறியது...
ungkal email id//

தளத்தின் இறுதியிலே இருக்கிறதே! பார்க்கவில்லையா?

kabaali007@gmail.com