சனி, 13 ஜூன், 2009

நினைவுகள் - "ஒன்பது ரூபாய் நோட்டு”

ஒன்பது ரூபாய் நோட்டு. படத்தின் பெயரே ஆயிரம்கதை சொல்லும். தங்கசாமி என்ற தங்கர்பச்சான் தன் வாழ்க்கையில் கல‌ந்த தன்னுடைய மண் மற்றும் மக்களை மையமாகவைத்து கற்பனை மைகலந்து அந்த நாட்களில் தீட்டிய ஓவியம் தான் ஒன்பது ரூபாய் நோட்டு என்ற சிறுகதைத் தொகுப்பு. அந்தப்புத்தகத்தின் ஒரு கதை வெள்ளைமாடு, அழகியாக பரிணாமம் பெற்றது. அதே போல ஒன்பது ரூபாய் நோட்டு என்ற கதையும் அதே பெயரிலே உயிர்பெற்று மக்களின் உயிரோடு கலந்துவிட்டது.

ஒரு கிராமத்து மனிதனின் வாழ்க்கையை மிகமிக உயிரோட்டமாக எடுத்துச்சொல்லிய படம். கோபம் கொண்ட ஒரு தந்தையின் தவறான செயலால் ஒரு குடும்பமே சீரழிந்து சின்னாபின்னமாகிய கதை தான் இந்தப்படம். இந்தப் படத்தில் மாதவர் படையாச்சி என்ற பாத்திரத்தில் சத்யராஜ் வாழ்ந்திருந்தார். சத்யராஜ் எவ்வளவோ படங்கள் நடித்திருந்தாலும் அவருக்கு சரித்திரமாக அமைந்த‌து 2 படங்கள் தான். ஒன்று திரு.ஞானசேகரின் இயக்கிய பெரியார். மற்றொன்று இந்த ஒன்பது ரூபாய் நோட்டு.

கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து துவங்குகிறது கதை. கையிலே காசில்லாமல் ஒரு அழுக்கு ஜமுக்காளத்தைப் போர்த்தியபடி வறுமை,பசி,துக்கம் என அனைத்தையும் சுமந்த முகத்தோடு வாழ்ந்து கெட்ட மனிதனாய் பேருந்தில் அமர்ந்து பயணத்தோடு தன் வாழ்க்கையையும் அசைபோட ஆரம்பிக்கிறார் இந்த மாதவர். கையும் காலும் உழைப்பும் மட்டுமே போதும் என பத்திரக்கோட்டையின் நிலத்தை முத்தமிட்டு வாழும் அழகான குடும்பம் மாதவருடையது. அவர்களின் குடும்ப நண்பரான காஜாபாய் (நாசர்) சைக்கிளில் சென்று வெற்றிலை வியாபாரம் செய்பவர்.

அவருக்கு பணஉதவி செய்து அவரின் தொழிலை மாற்றி வாழ்க்கையில் உயர்வு ஏற்படுத்துகிறார் மாதவர். அது மட்டுமின்றி கையிலிருக்கும் காசையெல்லாம் யார் கேட்டாலும் அள்ளிவழங்கும் அவருக்கு வில்லனாக‌ அதே ஊரின் தண்டபானி படையாச்சி(சிவசங்கர் மாஸ்டர்). அவரின் சில சிண்டுமுடிதலால் மாதவரின் பிள்ளைகளுக்குள்ளாக ஏற்படும் பிரச்சனையில் அனைத்தையும் துறந்து தன் மனைவியோடு வீட்டைவிட்டு வெளியேறுகிறார் மாதவர். தன் நண்பரிடம் அடைக்கலம் புகும் அவர் கடைசியில் அங்கிருந்தும் வெளியேறி தன் சொந்தமண்ணை முத்தமிட்டு மரணமடைகிறார்.

சத்யராஜ் எப்படித்தான் நடித்தாரோ எனத்தெரியவில்லை.அவ்வளவு எதார்த்தம். ஒரு கிராமத்து விவசாயி எப்படி இருப்பான்,அவன் அங்கம் முதல் ஆடை வரை அங்குல அங்குலமாக செதுக்கியிருந்தார் தங்கர். மாதவரின் மனைவி வேலாயி பாத்திரத்தில் அர்ச்சனா. நடிப்பு பரவாயில்லை ரகம். காஜாபாய் நாசர்,மனைவி கமீலா. மதம் தாண்டி சொந்தம் இருக்கு என்ற வரிகளுடன் கிராமத்து மக்களின் ஒற்றுமையை பிரதிபலித்திருந்தார். படத்தில் சிலரைத் தவிர நிறைய புதுமுகங்கள். அத்தனைபேரையும் அருமையாக வேலை வாங்கியிருந்தார் தங்கர். அதிலும் குறிப்பாக சொல்லவேண்டியது சிவசங்கர் மாஸ்டர்தான்.

இயற்கையிலே கொஞ்சம் பெண்மை நிறைந்திருக்கும் சிவசங்கர் இந்தப் படத்தின் தண்டபானி படையாச்சி பாத்திரத்துக்கு ஏகப் பொருத்தம். அவரை தேர்ந்தெடுத்தது எப்படி என்பது பற்றி ஒரு பேட்டியிலே தங்கர் தெரிவித்திருந்தது சுவாரஸ்யம். ஏதோ ஒருவிழாவில் தங்கரைச்சந்தித்த சிவசங்கர் தனக்கு உங்கள் படத்தில் ஏதாவது வேடம் இருந்தால் சொல்லுங்கள் என எதார்த்தமாக தங்கரிடம் சொல்லிவைக்க அவருக்கு அடித்தது இந்தவாய்ப்பு. ஒரு நாள் சிவசங்கரை அழைத்த தன் அலுவலகத்திற்கு அழைத்த தங்கர் அவரிடம் இந்த படத்தில் ஒரு வாய்ப்பு இருப்பதாக சொல்லியிருக்கிறார்.

தன் பாத்திரம் என்ன என்று கேட்டதற்கு உங்கள் சட்டையை,பேண்டைக் கழற்றுங்கள் என சொல்லவும் அதிர்ந்து போன சிவசங்கர் மறுபடியும் என்னவென்று கேட்க உங்கள் சட்டை பேண்டைக் கழற்றுங்கள் என்று சொல்லியிருக்கிறார். என்னவென்று புரியாமல் அனைத்தையும் கழற்றிவிட்டு வெறும் அண்டர்வேருடன் நின்ற அவரிடம் இதுகூடப் படத்திலே இருக்காது என்று சொல்லி முழுக்க முழுக்க சிவசங்கரை கோவணத்துடன் உலவவிட்டிருந்தார் தங்கர்.

நாசரின் வேடம் மிகச்சிறப்பானது. மாதவரின் நண்பராக அவ்வளவு அழகாக பிரதிபலித்திருந்தார். ஓரிடத்தில் பாம்புகடித்த வேலாயியைத் தூக்கிக் கொண்டு தன் காரிலே ஓடி கடைசியில் அவரைக் காப்பாற்ற முடியாத போது கலங்கும் நடிப்பில் நம்மையும் அழவைத்திருந்தார்.ரோகினி தன்னுடைய அமைதியான நடிப்பை வெளிக்காட்டி நம்மைக் கவர்ந்திருந்தார். வேலாயாக வரும் அர்ச்சனாவின் நடிப்பு ஒரு கிராமத்து தாயின் உணர்வுகள். ஆனால் அவர் இந்தப் படம் முழுவதும் கதறி அழுவது பார்ப்பவர்களுக்கு கொஞ்சம் சங்கடமாகத் தான் இருந்தது. இது குறித்து தங்கரிடம் கேட்டபோது வேலாயி என்பவள் என் தாய். அவளை அழவேண்டாமென்று சொல்ல எவனுக்கும் உரிமை கிடையாது என வழக்கம் போல அவரது பாணியில் பதில் கொடுத்தார் தங்கர்.

இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தங்கரின் வீட்டு வாசலில் நின்று ஒரு பெரியவர் அழுதிருக்கிறார். அவரை விசாரித்த தங்கர் காரணம் கேட்க, அவரின் கையைப்பிடித்து கொண்டு நானும் மாதவர் மாதிரி என் பிள்ளைகளிடம் கோபித்துக்கொண்டு சென்னை வந்து இங்கே இப்போது பிச்சையெடுத்துக் கொண்டிருக்கிறேன் தம்பி என மீண்டும் அழுதிருக்கிறார். நீங்கள் மறுபடியும் ஊருக்கு போகிறீர்களா? எனக்கேட்ட போது அவர் மறுத்துவிட்டதாகம் செய்திகள் வெளியாயின.

இந்தப் படததின் பாதிப்பை உணர்ந்த பிரமிட் சாய்மீரா நிறுவனம் தன் வசமுள்ள திரையரங்குகளில் 100 திரையரங்குகளில் ஒருநாள் ஒரு காலைக் காட்சியை இலவசமாக‌ ஏற்பாடு செய்திருந்தது. அதுமட்டுமின்றி தன் நிறுவனதிற்கு ஒரு படம்செய்ய தங்கரை புக் செய்தது.அந்த அளவிற்கு இந்தப் படத்தின் தாக்கம் அனைவரையும் சென்றடைந்தது. இப்படத்தின் காட்சிகளுக்குள்ளே புகுந்து இசையமைத்திருந்தார் பரத்வாஜ். படத்தின் இசையும் பாடல்களின் இசையும் மனதை கொள்ளை கொண்டது. ஒவ்வொரு பாடல்வரிகளையும் கிராமத்தின் தூய வாழ்க்கையோடு கலந்து எழுதியிருந்தார் கவிப்பேரரசு வைரமுத்து.

வானத்துப் பறவ விதைப்பதும் இல்ல,மழைவரும் முன்னே அறுப்பதும் இல்ல,

பசிப் பிணி கொண்டு படுப்பதும் இல்ல, இல்லை இல்லை என்று இரப்பதும் (அல்லது இறப்பதும்) இல்ல,

பறவைகள் எல்லாம் அழுவதும் இல்ல, அழுகையில்லாத மனிதனும் இல்ல.

வேலாயி அடியே வேலாயி,ஒரு வேதாந்தம் சொல்லவா வேலாயி,

ஆடு வளத்தா கூலுங்க மிச்சம்,,மாடு வளத்தா சாணி தான் மிச்சம், கோழி வளத்தா முட்டைங்க மிச்சம்,கொழந்தைய பெத்தா கோமணம் மிச்சம்.

பெத்தவங்க சாயிராங்க நமக்கு முன்னமே,பெத்ததுங்க பிரியுதுங்க கண்ணு முன்னமே!

சோறு போல தீந்து போச்சி சொந்தபந்தமே, என்ன சுட்டகாட்டில் விட்டுட்டியே ஞானத்தங்கமே!

நான் ஒதுங்க கூரயில்ல, நன்றி காட்ட நாதியில்ல, சாவக்கூடக் கூவிப்பாத்தேன் ஞானத்தங்கமே! அந்த சாவு எங்கோ செத்துப்போச்சி ஞானத்தங்கமே!

யார் யாரோ வெதச்ச நெலம் நான் வெதச்சது, யார் யாரோ குடிச்ச தண்ணி நான் குடிச்சது, யார் யாரோ விட்டகாத்து நான் இழுத்தது, இன்னும் யார் யாரோ பொதச்சக்காடு போகப்போறது.,,,

இதில் உன்னதன்று ஏதுமில்லை ஞானத்தங்கமே, இதில் என்னதென்று ஏதுமில்லை ஞானத்தங்கமே!

என ஒவ்வொன்றும் பாடலின் வரிகள் அல்ல. ஒரு கிராம விவசாயியின் உயிரின் வலிகள். ஆட்டோகிராப் படத்தின் ஒவ்வொரு பூக்களுமே பாடலை பல்கலைக்கழக பாடமாக வைத்தது போல இந்தப் படத்தின் இந்த வாழ்க்கை தத்துவத்தின் அற்புதமான வரிகளையும் பாடமாய் வைக்க ஆவண செய்யலாம்.

படத்தை கருவாக்கி உருவாக்கியவர் ஒளிஓவியர் தங்கர் பச்சான். அவருடைய படம் என்பதால் மரம்செடிகள் கூட எவ்வாறு நடிக்கவேண்டும் என சொல்லிக்கொடுத்திருக்கிறார். அவர் வாழ்ந்த வாழ்க்கையின் ஒவ்வொரு சாரமும் இந்தப் படத்திலே செதுக்கியிருக்கிறார். இந்தப் படம் வெளியான போது நண்பர்கள் புடை சூழச்சென்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்து என்னடா படம் என்று நொந்துகொண்டேன். ஆனால் இறுதிக்காட்சி நெருங்கும் போது தான் அதில் ஏதோ ஒரு வலி இருப்பதாக உணர்ந்தேன். மறு நாள் யாரிடமும் சொல்லாமல் தனியாக வந்து இந்தப் படத்தைப் பார்த்தேன்.தனிமையிலே பார்த்தபோது ஏதோ ஒரு வலியை உணந்தேன்.இந்தப் படம் என் வாழ்க்கையையும் பிரதிபலித்திருந்தது.

அதன் பிறகு பலமுறை சென்று இந்தப் படத்தைப் பார்த்து அழுததுண்டு. நான் முன்செய்த தவறுக்கு எப்படியாவது ஒருமுறை தங்கரை நேரில் சந்த்தித்து அவரிடம் மன்னிப்புக்கேட்டு அவர் கைப்பிடித்துக் கொண்டு அழவேண்டும் என பலமுறை முயற்சித்தேன். ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒருவேளை இத்தனை நாள் என் மனதில் புதைந்திருந்த இந்த சம்பவத்தை இன்று ஒரு பதிவாக வடித்து நிம்மதியடைகிறேன். ஒருவேளை தங்கரோ அல்லது அவரது நண்பர்களோ இந்தப் பதிவைப் படித்தால் எப்படியாவது அவரிடம் கொண்டு சேர்ப்பார்கள் என்ற ஒரு நம்பிக்கையுடன் கடைசியாக, இந்த‌ப்ப‌டம் மாதவர் என்ற விவசாயியின் வாழ்க்கையை மட்டுமல்ல , எத்தனையோ கிராமத்து மக்களின் பிரதிபலிப்பு தான் இந்த ஒன்பது ரூபாய் நோட்டு..

4 கருத்துகள்:

அஞ்சான் சொன்னது…

இப்படம் தமிழ் திறையில் ஒரு மைல் கல்லே. ஆனால் கவனிக்கப்படாமலேயே போய்விட்டது. சினிமாத்தனத்தை மீறியப்படம்

முரளிகண்ணன் சொன்னது…

நல்ல பதிவு.

\\வெள்ளைமாடு, அழகியாக பரிணாமம் பெற்றது\\

கல்வெட்டு சிறுகதை தானே அழகி என எடுக்கப்பட்டது?

கழுதை கார்ட்டூன் சொன்னது…

//அஞ்சான் கூறியது...
இப்படம் தமிழ் திறையில் ஒரு மைல் கல்லே. ஆனால் கவனிக்கப்படாமலேயே போய்விட்டது. சினிமாத்தனத்தை மீறியப்படம்//

படம் என்று சொல்வதை விட வாழ்க்கை என்று சொல்லலாம் சார்

கழுதை கார்ட்டூன் சொன்னது…

//ல பதிவு.

\\வெள்ளைமாடு, அழகியாக பரிணாமம் பெற்றது\\

கல்வெட்டு சிறுகதை தானே அழகி என எடுக்கப்பட்டது?//

கரெக்ட் முரளிசார் ! வெள்ளை மாடு என்பது சிறுகதைத் தொகுப்பு. அதிலே "கல்வெட்டு" என்ற கதை தான் அழகி. அதே போல ஒன்பது ரூபாய் நோட்டு என்பது இன்னொரு கதைத் தொகுப்பு.தகவலுக்கு நன்றி சார்.