திங்கள், 1 ஜூன், 2009

சரவெடி “பாமகவிற்கு சில பளபளப்பான யோசனைகள் “

தேர்தலில் தோல்வியடைந்து அதளபாதளத்திற்கு சென்று விட்ட பாட்டாளி மக்கள் கட்சியை மீண்டும் மக்களின் கூட்டாளி ஆக்குவதற்கு எதோ நம்மால்  இயன்ற யோசனைகள்

யோசனை 1: நீங்கள் அடிக்கடி கூட்டணி தாவுவதால் தான் மக்கள் உங்களை வெறுத்துவிட்டார்கள், அதனால் முதலில் கட்சியின் பெயரை நீயூமராலாஜிப் படி ஒரு சின்ன மாற்றம் செய்ய வேண்டும். அதாவது பாமக என்பது “பாட்டாளி மக்கள் கட்சி என்பதை மாற்றிவிட்டு “பாயும் மக்கள் கட்சி என திருத்திவிட வேண்டும். இதனால் நீங்கள் மறுபடியும் அடுத்தக் கூட்டணிக்குத் தாவினாலும் பெயருக்கேற்ற கட்சிதான் என்பதால் மக்கள் உங்களைக் கண்டுகொள்ள மாட்டார்கள்.

யோசனை 2: தற்சமயம் வேலையில்லாமல் இருக்கும் உங்கள் வேட்பாளர்களை விவசாய வேலைகளுக்கு அனுப்பலாம். நாத்து நடுதல், களை பறித்தல், கதிர் அறுத்தல் என விவசாய வேலைகளுக்கு இலவசமாக அனுப்பி வைக்கலாம். அதை அப்படியே படம்பிடித்து மக்கள் தொலைக்காட்சியின் மலரும் பூமியில் மலரவிடலாம். இதைக் காணும் மக்கள் உங்கள் மீது இரக்கப் பட்டு அடுத்த தேர்தலில் ஓட்டுக்களை குத்திக் குமுறிவிடுவார்கள். ஆனா ஒன்னு கதிர் அறுத்த கையோட நெல்லக் களத்துமேட்டுக்கு கொண்டு போகம உங்க வேட்பாளர்கள் அவங்க வீட்டுக்கு ஏத்திக்கிட்டாங்கன்னா கிழிஞ்சிடும்.

யோசனை 3: வேலையில்லாம் இருக்கும் வேட்பாளர்களை “ராம்ராஜ் காட்டன் வேட்டிகள் விளம்பரத்தில் நடிக்க வைக்கலாம். இதன மூலம் உங்கள் வேட்டி சட்டை பிரச்சாரத்தை வெளியுலகிற்கு காட்டின மாதிரியும் இருக்கும். அவங்களும் நாளு காசு பாத்த மாதிரியும் இருக்கும். அய்யய்யோ! ராம்ராஜ் கம்பெனி தயாரிப்புல‌ பனியன் ஜட்டியும் இருக்குது கவன‌ம்.  

யோசனை 4: ஊருக்கு ஊர் சந்து பொந்துகளில் நடக்கும் பொட்டிக்கடை, பீட்டல் சாப்புகளை உங்கள் பவரைப்  பயன்படுத்தி உங்களின் வேட்பாளர்களுக்கு வாங்கிக்கொடுத்து விடலாம். அங்கே விற்கும் பீடி சிகெரெட்களில் உள்ள புகையிலையை  வெளியே எடுத்து விட்டு அதற்குள் “லெட்சுமி வெடி மருந்தை ரொப்பி விடலாம். ஒரு பத்து பேருக்கு வாய் வெடிச்சி இந்த விசயம் வெளிய தெரிஞ்சா ஒரு பய பீடி சிகெரெட் வாங்கவும் மாட்டான், குடிக்கவும் மாட்டான். இதன் மூலம் உங்களின் புகையிலை பிரச்சாரங்களை முன்னிருத்தலாம்.

யோசனை 5: தமிழகத்தின் செல்வக் கள‌ஞ்சியமாம் டாஸ்மாக்களில் இருக்கும் பார்களை ஏலத்திலே எடுத்துக் கொண்டு அங்கே உங்கள் ஆட்களைப் போட்டுவிடலாம். "சரக்கடிக்க உள்ளே வந்தா சாவு தான்" என ஒரு போர்டை வைத்துவிட்டாலே போதும்.உங்கள் ஆட்கள் அங்கே இருக்கிறார்கள் எனத் தெரிந்தால் ஒரு பய உள்ளே வரமாட்டான். இதன் மூலம் கொஞ்ச நாட்களில் படிப்படியாக சரக்கு விற்பனைக் குறைந்து விடும்.

யோசனை 6: +2 மற்றும் 10 ஆம் வகுப்புத் தேர்வில் தோல்வியடைந்த மாணவ மாணவிகளுக்கு இலவசமாக டியூசன் எடுக்கலாம்.அதைப் படம்பிடித்து மக்கள் டிவியிலே ஒளிபரப்பலாம். தப்பித்தவறி தமிழுக்கு டியூசன் எடுக்கிறேன்னு சொல்லி அவர்களுக்கு புதுப்புது வார்த்தைகளை சொல்லிக் கொடுத்து மெண்டல் ஆக்கிவிட வேண்டாம்.

யோசனை 7: வேட்பாளர்களை மாறுவேடத்தில் சென்னை மெரீனா கடற்கரைக்கு கடலை விற்பவர் போல அனுப்பிவைத்து அங்கே ஏற்கனவே கருகக் கருக கடலை போட்டுக் கொண்டிருக்கும் காதல் ஜோடிகள், கஸ்டமர் ஜோடிகளைப் படம்பிடித்து மக்கள் டிவியில் "கடலோரக் கடலைகள் " என்ற பெயரிலே புதிய நிகழ்சி தொடங்கி அதிலே வெளியிட்டு அவர்கள் மானத்தை வாங்கிவிடலாம். இந்த விசயம் தெரிந்து காதலர்கள் வேறு இடத்துக்கு சிப்ட் ஆகிவிடுவார்கள். ஹூம். முன்னாடி சாந்தி தியேட்டர்ல சந்திரமுகி ஓடிக்கிட்டு இருந்திச்சி. இப்ப அதையும் தூக்கிட்டாங்க. வேற எங்க போவாங்க.

யோசனை 8: யார் யார் வீடுகளில் தினமும் ஆங்கில, ஹிந்தி சேனல்கள் பார்க்கிறார்கள் என ஒரு கணக்கெடுத்து அவர்கள் வீட்டுக்குள் புகுந்து அவர்கள் வீட்டு டிவிகளில் தார் பூசி கருப்பாக்கி விடலாம். இதனால் அவர்கள் டிவி பார்ப்பதையே நிறுத்திவிடுவார்கள்.

யோசனை 9: தமிழ்நாட்டில் தினசரி வெளியாகும் நீயூஸ்பேப்பர்களை ஏஜென்ட் எடுத்து அதில் ஆங்கில நீயூஸ் பேப்பர்களை மட்டும் வெளியிடாமல் ஒரு நாள் பெண்டிங் வைத்து அடுத்த நாள் வெளியிடலாம். இதனால் ஆங்கில பேப்பர் படிப்பவர்கள் முழுமையாகத் தமிழ்பேப்பர் வாங்க ஆரம்பித்து விடுவார்கள்.  

யோசனை 10: தமிழ் நாடு முழுவதும் உள்ள சினிமா டிஸ்டிபியூ சன் கம்பெனிகளை விலைக்கு வாங்கி எல்லாப் படங்களையும் வினியோகம் செய்யலாம். படம் ரிலீஸூக்கு முன்னர் உங்க ஆபிஸூக்கு வரும் படப் பெட்டிகளைத் திறந்து அந்த பிலிம்களை ரீல் பை ரீலாக வெட்டி மாற்றி மாற்றி ஒட்டி பிறகு அனுப்பி வைக்கலாம். ஏற்கனவே சில தமிழ்படங்களால் மண்டை குழம்பிப் போய்த் திரியும் ரசிகர்கள் இதைப் பார்த்து சுத்தமாக தமிழ்சினிமாவையே வெறுத்து விடுவார்கள்.

யோசனை 11: கடைசியாக கொஞ்சநாளைக்கு பாட்டாளி மக்கள் கட்சியை “பாட்டாளி சர்க்கஸ் ஆக மாற்றி ஊருக்கு ஊர் சென்று காட்சி நடத்தலாம். ஏற்கனவே பாமக சமஉ களுக்கு சைக்கிள் ஓட்டும் அனுபவம் இருக்கிறது. அதை அப்படியே கூண்டுக்குள் ஓட்டச் சொல்லலாம். கூட்டணி விட்டு கூட்டணி தாவும் அனுபவம் நிறையவே இருப்பதால் உங்களுக்கு தாவி விளையாடும் "பார் விளையாட்டுக்கள்" மிகவும் எளிதாக வந்துவிடும். தேவைப்பட்டால் அண்ணன் திருமாவை அழைத்து வந்து சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க வைத்தால் அதுவும் நல்ல காமெடியாக இருக்கும். அது மட்டுமின்றி என் கட்சியில் இருப்பவர்கள் யாராவது தவறு செய்தால் அவர்களை சாட்டையால் அடிப்பேன் என  மருத்துவர் அய்யாவிற்கு ஏற்கனவே சாட்டை பிடித்து பழக்கம் இருப்பதால் அவரையே ரிங் மாஸ்டராகப் போட்டுவிடலாம்.

இதையெல்லாம் அமுல்படுத்தினால் அப்பறம் பாருங்க, உங்கள் கட்சிக்கும் மக்களுக்கும் உள்ள நெருக்கத்தை.

பிகு: இது சிரிப்பதற்காக மட்டுமேயன்றி யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல. சிரிப்பு வராவிட்டால் நான் பொருப்பல்ல. 

3 கருத்துகள்:

Anandhan சொன்னது…

i thing makkal television is the political channel done some good programmes for tamil and tamil culture especially for formers

ஷங்கர் Shankar சொன்னது…

/// ராம்ராஜ் கம்பெனி தயாரிப்புல‌ பனியன் ஜட்டியும் இருக்குது கவன‌ம். ///

பனியன் ஜட்டி இரண்டுமே ஆங்கில வார்த்தைகள் அதனால் நாங்கள் பல காலமாக அதை அணிவதில்லை. அதனால் அந்த இரு உள்ளாடைகளை அணிவதற்கு தடை விதிக்க வேண்டும் அல்லது சுத்த தமிழில் பெயர் வைக்க வேண்டும்!

Bleachingpowder சொன்னது…

//+2 மற்றும் 10 ஆம் வகுப்புத் தேர்வில் தோல்வியடைந்த மாணவ மாணவிகளுக்கு இலவசமாக டியூசன் எடுக்கலாம்.//

அதுக்கு அந்த கட்சி தொண்டர்கள் யாராவது பத்தாவது வரைக்கும் படிச்சிருக்கனுமே