வியாழன், 25 ஜூன், 2009

சரவெடி: ரகுமான் கலைஞர் காமெடி சந்திப்பு 2ம் பாகம்

கலைஞர், ரகுமான் காமெடி சந்திப்பு முதல் பாகம் படிக்க இங்கே கிளிக்க‌

கலைஞர்: தம்பி படத்துக்கு டைட்டில் என்ன தெரியுமா? "பாசப் பச்சோந்திகள்"

ஆற்காட்டார்: அப்படி போடுங்க தலைவரே! அருமையான டைட்டில். நீங்க கதைய ஆரம்பிங்க. நான் அந்தப் பக்கமா போயி இந்தப் படத்த தயாரிக்க எவனாவது இளிச்சவாயன் சிக்குறானான்னு பாத்துட்டு வாரேன்.

கலைஞர்: ஏய்யா புது ஆளத்தேடுற! என்னோட முந்தைய படம் "அலியின் ஆசை" யைத் தயாரிச்சாங்கள்ள சாந்தினி புரொடக்சன், அவங்களயே இந்தப் படத்துக்கும் புக் பண்ணுய்யா!

ஆற்காட்டார்: ஏது மறுபடியும் அவங்களயா? தலைவரே! உங்க அலியின் ஆசை படத்தைத் தயாரிச்ச அந்த சாந்தினி பட நிறுவனர் இப்ப லட்சாதிபதி ஆயிட்டார்.

கலைஞர்: கேட்டுக்குங்க தம்பி! நம்ம படத்தையும் எடுத்து ஒருத்தர் லட்சாதிபதியா ஆயிருக்கார்.

ஆற்காட்டார்: நாசமா போச்சி! அதுக்கு முன்னாடி அவர் கோடீஸ்வரரா இருந்தாரு. சரி அவங்க தலையெழுத்த யாரால மாத்த முடியும். சரி தலைவரே! நீங்க கதைய ஆரம்பியுங்க. ரகுமான் தம்பி என்ன ரொம்ப நேரமா உங்ககிட்ட இருந்து எந்தவிதமான ரியாக்சனும் இல்ல.என்ன ஆச்சி.

ரகுமான்: ஒன்னுமில்ல சார்.(அட ஆண்டவா! பக்ரீத்துக்கு வந்து மாட்டிக்கிட்ட ஆடு மாதிரி ஆயிப்போச்சே என் நெலம)

ஆற்காட்டார்: தம்பி! உங்க மைன்ட் வாய்ஸ‌ நான் கேட்ச் பண்ணிட்டேன். பரவாயில்ல,சும்மா கேளுங்க தம்பி.

கலைஞர்: தம்பி! இந்தக் கதை சென்னிக்குளம் அப்டிங்கற ஊருல இருந்து ஆரம்பிக்குது. அந்த ஊருல சரியார் அப்டின்னு ஒரு பெரியவர் ஒரு பொட்டிக்கடை வச்சி நடத்திக்கிட்டு வர்றார். அந்தக் கடையில் செந்தாமரை அப்டின்னு ஒருத்தர் வேலைக்கு சேர்றார். அவர் சேர்ந்த பிறகு அங்க யாவரம் நல்லா சூடு பிடிக்க ஆரம்பிச்சிடுது. கொஞ்ச நாள் கழிச்சி சரணாகதி அப்டின்னு ஒருத்தர் அதே கடையில வேலைக்கு சேர்றார். ஒரு தடவ ஏதோ ஒரு விசயத்துல‌ செந்தாமரைக்கும் சரியாருக்கும் பிரச்சினையாகி, செந்தாமரை சரணாகதி சேர்ந்து தனியா ஒரு மளிகைக் கடைய ஆரம்பிக்கிறாங்க. கொஞ்ச நாள்லயே மளிகைக் கடை நல்ல டெவலப் ஆயிடுது. நல்ல டெவலப் ஆன நெலயில செந்தாமரை மரணமடைகிறார். அந்த சந்தர்பத்த பயன்படுத்தி அங்க இருந்த கல்லாப்பெட்டியில சரணாகதி உக்காந்துடுறாரு.

அவர் குடும்பமும் அந்தக் கடைக்குள்ள புகுந்து மிட்டாய் பிஸ்கட்டுன்னு ஏகத்துக்கும் சாப்புட ஆரம்பிச்சிடுது. கணக்கு ஒரு மாதிரி வர்றத பாத்துட்டு வேக்காடு மாடசாமின்னு ஒருத்தர கணக்கு புள்ளையா அந்தக் கடையில உக்கார வைக்கிறாரு சரணாகதி.

ஆற்காட்டார்: தலைவரே! இந்தக் கத..,இந்தக் கதய எங்கயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கே!

கலைஞர்: சும்மா இருய்யா, சுவாரஸ்யமா கத போய்கிட்டு இருக்கும் போது டிஸ்டர்ப் பண்ணாதே! அந்த சரணாகதிக்கு 2 புள்ளைங்க. ஒரு மகன் பேரு தலக்கறி, இன்னொரு மகன் பேரு சுடலை. இதுல தலக்கறி பீடாக்கடையும், சுடலை சோடாக்கடையும் வச்சி நடத்திக்கிட்டு வாறாங்க. சரணாகதியோட இன்னொரு சொந்தக்காரங்களுக்கு ரெண்டு புள்ளைங்க. அவங்க ரெண்டு பேரும் அந்த மளிகைக்கடைக்குப் பக்கத்துலயே ஒரு பிரிண்டிங் பிரஸ்ஸூம், ஒரு 16 MM பட புரொஜக்டரும் அவங்க வச்சிருந்தாங்க. அவங்களுக்கு என்ன வேலையின்னா அந்த மளிகைக் கடைக்கி வெளம்பர நோட்டீஸ் அடிச்சிக்குடுப்பாங்க. அதாவது மைதா மாவு வாங்கினா மசாலாப்பொடி இலவசம், கடலப்புண்ணாக்கு வாங்குனா கருப்பட்டி இலவசம்னு நோட்டீஸ் அடிச்சி வெளியிடுவாங்க. அது மட்டுமில்லாம சுத்துவட்டார கோயில்கள்ல திருவிழா வந்தா அங்க போயி திரையக் கட்டி 16 MM படம் ஓட்டுவாங்க. படத்துக்கு நடு நடுவே அந்த கடை வெளம்பரத்தையும் போட்டுக்குவாங்க. இவங்களோட வளர்ச்சியப் புடிக்காத வேக்காடு மாடசாமி இவங்க எந்த ஊர் திருவிழாவுக்கு படம் ஓட்டப்போனாலும் பின்னாடியே போயி அந்த ஊர்ல இருக்குற கரண்டு கம்பத்துல உள்ள பியூஸ வெட்டிவிட்டுட்டு வந்திடுவார்.

ஆற்காட்டார்: தலைவரே!..., தலைவரே! இந்தக் கதய எங்கயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கே!

கலைஞர்: சும்மா இருய்யா..,ஒரு நாளு பக்கத்து ஊரு திருவிழாவுக்கு படம் ஓட்டப் போகும் போது க‌ரண்டு போயிட்டதால படம் ஓட்ட முடியாம அந்த ரெண்டு பேரும் வேற ஒரு முடிவுக்கு வந்தாங்க. அதாவது ஒரு பட்டிமன்றம் வச்சிறலாம்னு சொல்லி காண்டா வெளக்க கொளுத்திக்கிட்டு பட்டிமன்றத்த ஆரம்பிச்சாங்க. என்ன தலைப்புன்னா "செரிமாணத்திற்குச் சிறந்தது தலக்கறி விக்கிற பீடாவா? சுடலை விக்கிற சோடாவா? " அப்டின்னு பட்டிமன்றத்த போட்டு கடைசியில , செரிமாணத்திற்குச் சிறந்தது சுடலை விக்கிற சோடாதான்னு தீர்ப்பு சொல்லிட்டாங்க. இந்த விசயத்த‌ கேள்விப்பட்ட தலக்கறி தன்னோட ஆளுங்கள கூட்டிக்கிட்டு வந்து அந்த தம்பிகளோட பிரிண்டிங் பிரஸ்ஸ அடிச்சி நொறுக்கிட்டாங்க. சரணாகதியும் அவங்கள அந்த எடத்துலேந்து கடைய காலி பண்ணச்சொல்லிட்டார்.

தன் கடைக்கு இனிமேல் நோட்டீஸ் அடிக்க வேண்டாமுன்னு அந்த ஆர்டரையும் கேன்சல் பண்ணிட்டார். அதுமட்டுமில்லாம அவங்களுக்குன்னு தனியா ஒரு பட புரொஜக்டரையும் வாங்கி அவங்களுக்குப் போட்டியா கம்மிவெலயில படம் ஓட்ட ஆரம்பிக்கிறாரு சரணாகதி. அத்தோட அவங்க கடையில வேல பாத்தா ஆப்பரேட்டர்ல இருந்து, கூட்டிப்பெருக்குற ஆயா வரைக்கும் இவங்களோட புதுக்கடைக்கு இழுத்துக்கிறாங்க.இந்த நிலையில அவங்க கடைக்கு எதிரில செவப்பு சாந்துன்னு ஒருத்தர் புதுசா கடை ஆரம்பிக்கிறாரு. இந்தத் தம்பிக செவப்புச்சாந்து கடைக்கு வெளம்பரம் பண்ண ஆரம்பிக்கிறாங்க. நோட்டீஸூம் அடிச்சி வெளியிடுறாங்க, அதுமட்டுமில்லாம சரணாகதி கடையில எல்லா பொருளுமே எக்ஸ்பெயரி ஆனது, கலப்படம் அப்டி இப்டின்னு கிளப்பிவுடுறாங்க.

ஆற்காட்டார்: தலைவரே! இந்தக் கத....

கலைஞர்: சும்மா இருய்யா. அப்பறம் கேளுங்க தம்பி,அந்த தம்பிக பண்ணுற வெளம்பரத்தால சரணாகதி கடைக்கி யாவரம் கொறய ஆரம்பிச்சி செவப்புச்சாந்து கடைக்கி கூட்டம் கூடுது. இதனால ஒருமுடிவுக்கு வந்த சரணாகதி அந்த ரெண்டு தம்பிகளையும் அழைச்சி மீண்டும் தன் கடைக்கே நோட்டீஸ் அடிக்கிற வேலையக் குடுத்துடுறாரு. இதப்பத்தி அந்த ஏரியா ஆளுங்க கேட்டதுக்கு, இரும்பு பழுத்தது கரும்பு இனித்தது அப்டின்னு சம்பந்தம் இல்லாம எதை எதையோ அள்ளிவிட்டாரு சரணாகதி.

ரகுமான்: தலைவரே! நான் ஒரு கேள்வி கேக்கட்டுமா?

ஆற்காட்டார்: என்னது கேள்வியா! தம்பி என்ன இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு. தலைவர் யார் கேள்விக்கும் பதில் சொல்ல மாட்டார். அவரே கேள்வி கேட்டு அவரே பதில் சொல்லிக்குவார்.

ரகுமான்: என்னது, அவரே கேள்வி கேட்டு அவரே பதில் சொல்லிக்குவாரா? இது என்ன போங்கு ஆட்டமால்ல இருக்கு.

கலைஞர்: யோவ்! என்னயா சம்பந்தமே இல்லாம இந்த டைலாக்க இங்க கொண்டு வந்து நொழக்கிறே?

ஆற்காட்டார்: அது ஒன்னுமில்ல தலைவரே! போன எபிசோடுல ஒரு உடன்பிறப்பு உங்க கேள்வி பதில் அறிக்கையையும் சேர்த்து ஒரு வாரு வாருனா நல்லா இருக்கும்னு எங்கிட்ட கேட்டார், அதான் கும்பலோட கும்பலா இதையும் சேர்த்து கும்மியடிச்சிட்டேன்.

கலைஞர் : இருக்கட்டும் இருக்கட்டும். அப்பறம் கவனிச்சிக்கிறேன். தம்பி நீங்க ஏதோ கேள்வி கேக்கனும்னு சொன்னியலே! என்னது அது?

ரகுமான்: தலைவரே! நீங்க எதுக்காக இவ்ளோ மெனக்கெட்டு எங்கிட்ட இந்த மொக்க‌ கதயச்சொல்லிக்கிட்டு இருக்கிய?

கலைஞர்: நல்லா கேட்டிய போங்க கேள்வி. என் அடுத்தப் படம் பாசப் பச்சோந்திகளை தயாரிக்கிறது சாந்தினி புரொடக்சன், வேலையில்லாம வீட்டுல படுத்துக்கெடக்குற‌ ராம நாராயானன் தான் இயக்குனர், இசை? வேற யாரு நீங்க தான்.

(இதைக் கேட்டவுடன் ரகுமான் திடீரென நெஞ்சைப் பிடித்துக் கொண்டு படாரென கீழே விழுகிறார். ஆற்காட்டார் சோடா தெளித்து எழுப்புகிறார்.)

ரகுமான்: தலைவரே! இவ்வளவு அதிர்ச்சியான செய்தியை என் வாழ்க்கையில இதுவரை நான் கேள்விப்பட்டதே இல்ல. நான் இந்த‌ படத்துக்கு இசையமைச்சேன்னா எனக்கு ஆஸ்கார் விருது குடுத்தவங்க என் வீடு தேடிவந்து அதப்புடிங்கிக்கிட்டு போயிடுவாங்க. அதனால என்ன விட்டுருங்க.

ஆற்காட்டார்: என்ன தம்பி இப்படி பயப்படுறீக. தலைவர் இந்த மாதிரி எத்தனையோ கதையெழுதி எத்தன பேரோட கதைய...

கலைஞர்: யோவ்….....,

ஆற்காட்டார்: உயர்த்தியிருக்காருன்னு சொல்ல வந்தேன் தலைவரே!

கலைஞர்: அதான பார்த்தேன். தம்பி கடைசியா என்ன தான் சொல்றிய?

ரகுமான்: இந்தப் படத்த என கடைசி படமாக்கிறாதியேன்னு சொல்றேன்.

கலைஞர்: புரியலையே!

ரகுமான்: தலைவரே! இந்த டாக்டர் பட்டத்த வேனுமின்னாலும் நீங்களே வச்சிக்கிங்க. அதுமட்டுமில்லாம எனக்கு குடுத்த 2 ஆஸ்கார் விருதையும் உங்கள்ட்டயே கொண்டுவந்து குடுத்துடுறேன். என்ன வுட்ருங்கோ.

ஆற்காட்டார்: தம்பி! கதவு சாத்தியிருக்கு. இது ஒன்வே. உள்ள வந்தா வெளியப்போறது ரொம்ப கஷ்டம்.அதனால நீங்களே நல்ல முடிவு பண்ணிக்கங்க.

(இதைக்கேட்டு எழுந்த ரகுமான் குபீரென அங்கேயிருந்த கண்ணாடி ஜன்னலை உடைத்துக்கொண்டு வெளியே வந்து விழுகிறார். “டேய் புடிங்கடா அவன என ஆற்காட்டார் கத்துவதைக் கேட்டு செக்யூரிட்டிகள் மெயின்கேட்டைப் பூட்டி விட்டு பாய்ந்து வர, அங்கே இருந்த கொடிக்கம்பத்தைப் பிடிங்கி அதன் உதவியோடு ஜம்ப் செய்து மெயின்கேட்டைத் தாண்டி அங்கு வந்த 13B பஸ் ஜன்னலைப் பிடித்து தொங்கியபடி எஸ்கேப் ஆகிறார் ரகுமான்)

கலைஞர்: என்னய்யா இப்டி ஆயிடிச்சி. சரி போனா போறான் விட்டுடு அவன பொழைக்கத்தெரியாத பய. நீ நம்ம பழையராசாவுக்கு போன போட்டு வரச்சொல்லுய்யா!

(ஆற்காட்டார் போன் போட அங்கே சேது பட காலர் டியூன் கேட்கிறது. “எங்கே செல்லும் இந்தப் பாதை, யாரோ யாரோ அறிவார்)

ஆற்காட்டார்: (சிரித்தபடி) தலைவரே! நம்ம பழையராசா இன்னும் அலியின் ஆசை அதிர்சியில் இருந்து மீளலைன்னு நெனக்கிறேன். நல்லா ஓடுது பாருங்க ஒரு பாட்டு....,,

-முற்றும்

6 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

எப்படிங்க இப்படியெல்லாம் யோசிக்குறீங்க, முடியல

ஆனந்தன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ஆனந்தன் சொன்னது…

ரொம்ப நல்ல எழுதறீங்க -ரூம்போட்டு யோசிப்பீங்களோ

Ravindar சொன்னது…

Hai,

Do You want Goggle Adsense For Your Website or Blog?

Just Visit Here.

http://www.ennainambalam.blogspot.com

R.Gopi சொன்னது…

பின்றீங்களே "தல"

என்ன தான் ரூம் போட்டு, யோசிச்சா கூட இந்த மாதிரி எழுத முடியுமான்னு தெரியல......

வாழ்த்துக்கள்.....

டாஸ்மாக் கபாலி சொன்னது…

// ஆனந்தன் ////R.Gopi //பெயரில்லா // வருகை தந்த அனைவருக்கும் நன்றி. இது போன்ற பதிவுகள் தொடர்ந்து கொடுக்க ஆசைதான். உங்கள் வருகையே என் மகிழ்ச்சி