செவ்வாய், 12 மே, 2009

பேனா வாங்கலியோ பேனா...!

தலைப்பைப் பாத்ததும் ஏதோ பேனா வெளம்பரம்னு நெனச்சி வந்தியலா! அது தான் இல்ல வழக்கம் போல நம்ம தலைவர் கலைஞரோட புராணக் கடிதம் தான். சரி சரி வந்தது வந்திட்டீய விதியேன்னு படிங்க

உடன்பிறப்பே,

பழைமை வழக்கமாக நம் வீடுகளில் குழந்தைதவழும் பருவத்தில் பால்  கொழுக்கட்டை விழா நிகழ்ச்சி ஒன்று நடத்துவார்கள். கூடத்தில் விளக்கேற்றி வைத்து -கோல மிட்டு -தரையில் ஒரு பெரிய தாம்பாளத்தில் கொழுக்கட்டை, வடை, நகை நட்டுகள், எழுதுகின்ற பேனா, சிறிய கத்தி முதலியவற்றை வைத்து அங்கே தவழ்ந்து செல்கின்ற குழந்தை அந்தப் பொருள்களில் எதை எடுக்கிறது என்று கவனிப்பார்கள். எனக்கு இப்படி குழந்தை பருவத்தில் பால்  கொழுக் கட்டை நிகழ்ச்சியை என் வீட்டார் நடத்தியபோது - நான் ஊர்ந்து, நகர்ந்து, தவழ்ந்து குறிப்பிட்ட தாம் பாளத்தை அடைந்து -அதிலேயிருந்த பேனாவை எடுத்தேனாம்.

(தலைவரே! நீங்க என்ன சொன்னாலும் நாங்க நம்புவோம் அப்டிங்கிறதுக்காக இப்படி ஒரு மகா ரீல சுத்துறீங்களே! சரி சரி அன்னிக்கு நீங்க எடுத்த பேனா இங்க் பேனாவா? ரீபிள் பேனாவா?)

அன்னையர் தினம் கொண்டாடி அடுத்தடுத்த நாட்களில் அந்த நினைவு எனக்கு வருவது ஒரு சுவையான அனுபவம்! (அன்னையர் தினத்திலே அம்மாவுக்கு நீங்க ஏன் வாழ்த்துச் சொல்லல தலைவரே!)

அந்த நிகழ்ச்சியை என் வாயிலாக ஒரு முறை கேள்விப்பட்ட இளம் ஓவியர் ராஜபரணி என்பார், என்னை எழுதுகோலாகச் சித்திரித்து அன்னை அஞ்சுகம் அம்மையார் ஆட்டுகின்ற தொட்டிலையும் ஓவியமாகத் தீட்டி ஒரு அற்புதக் கற்பனையைச் செய்து தந்தார். அந்த ஓவியம் இன்னமும் என் வீட்டில் இருக்கிறது. ஆனால், தொட்டிலில் ஆடும் பேனா தூங்கவே இல்லை. இன்னமும்;  (அத நீங்க தூங்க விட்டாத்தானே! தெனம் ஒரு அறிக்கை, கடிதம்னு எழுதி இம்சைய குடுக்கிறீயலே தலைவரே!)

ஏழை எளியவர்களுக்காக -ஏதுமறியா பாமரர்களுக்காக -

உடல் ஒடிய உழைக்கின்ற தொழிலாளர்களுக்காக -(இது வரை எதுவுமே செய்யலைன்னு சொல்றீயலா?) 

உத்தம நெஞ்சம் கொண்ட உழவர் பெருமக்களுக்காக -அடித்தட்டு, அடித்தட்டு என்று அடுக்கிக் கொண்டே போகக்கூடிய அடித்தட்டு மக்களுக்காக -

என் மூச்சாக விளங்கும் தமிழ் மொழிக்காக -என் இதயத் துடிப்பாம் இன உணர்வுக்காக -

(எலக்சன் நேரத்தில் மட்டும் துடிக்கும் இன உணர்வுன்னு சொன்னா பொருத்தமா இருக்கும் தலைவரே!)

எங்கெங்கே தமிழர்கள் வாழ்கின்றார்களோ, அங்கெல்லாம் அவர்களின் உரிமைக்குப்போராடுவதற்காக -அன்னையார் முன்னிலையில் நான் எடுத்த பேனா இன்னமும் தன் அலுவலை முடித்துக் கொள்ளவில்லை.

கண்ணொளி இழந்தோர்க்கு கையெழுத்திட்டதும் - இந்தப் பேனாதான்!

கையில் ஓடேந்தி பிச்சையெடுத்தோர்க்கு மறு வாழ்வளிக்க திட்டம் தீட்டியதும் - இந்தப் பேனாதான்!

மனிதனை வைத்து மனிதன் இழுக்கின்ற கைரிக்ஷா கொடுமை இன்னமும் கம்யூனிஸ்ட் மாநிலத் தலைநகரான கொல்கொத்தாவில் இருந்தும் -அதனை தமிழகத்தில் அறவே ஒழித்து இலவச சைக்கிள் ரிக்ஷா வழங்கிட கையெழுத்திட்டதும் -இந்தப் பேனாதான்!

(தலைவரே! தமிழன் இளிச்சவாயன் தான். எது சொன்னாலும் நம்புவான் தான், அதுக்காக கல்கத்தாவிலும் சைக்கிள் ரிக்சாவை ஒழிச்சது நீங்கதான் சொல்றியலே!இது உங்களுக்கே நியாயமா? பிலிம் சுத்துறத்துக்கு ஒரு அளவே இல்லையா)

குடிசை மாற்று வாரியம் கண்டதும் -இந்தப் பேனாதான்!

குடிநீர் வாரியம் கண்டதும் - இந்தப் பேனாதான்!

ஊனமுற்றோர்க்கு திட்டம் தந்ததும் - இந்தப் பேனாதான்!

குடியிருப்பு மனை சட்டம் கொணர்ந்ததும் - இந்தப் பேனாதான்!

உச்ச வரம்புச் சட்டம் உருவாக்கியதும் - இந்தப் பேனாதான்!

உழவர்களுக்கும், நெசவாளர்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கியதும் - இந்தப் பேனாதான்!

அண்ணா மறுமலர்ச்சி திட்டம் தீட்டியதும் - இந்தப் பேனாதான்!

(அப்ப நீங்க எதுவுமே செய்யல? எல்லாமே அந்தப் பேனாதான் செஞ்சதா? பேசாம அந்த பேனாவ சிஎம் ஆக்கிறலாமே தலைவரே)

பெரியார் நினைவு சமத்துவபுரம் அமைத்ததும் - இந்தப் பேனாதான்!

காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக சட்டம் ஆக்கியதும் - இந்தப் பேனாதான்!

தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு நாள் என்று சட்டம் ஆக்கியதும் - இந்தப் பேனாதான்!

(மறுபடியும் பல்டி அடித்து சித்திரை முதல் நாளையே புத்தாண்டு நாள் என்று அறிவித்ததும் இந்த பேனாதான்! சாரி தலைவரே! கொஞ்சம் ஓவராத்தான் போய்ட்டமோ?)

அய்யன் திருவள்ளுவர்க்கு 133 அடி உயரத்தில் சூழும் தென் கடல் ஆடும் குமரி முனையில் அழகிய சிலையெடுக்க உத்தரவிட்டதும் - இந்தப் பேனாதான்!

இந்தியாவில் எங்குமில்லாத அளவிற்கு ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு தர ஆணையிட்டதும் - இந்தப் பேனாதான்!

(ஆனால் அரிசி கடத்துபவர்களுக்கு உங்கள் ஆட்கள் பில் போடுவது வேற பேனா தலைவரே)

மகளிர் வாழ்வில் மகிழ்ச்சியைப் பெருக்கிட அனைத்துக் குடும்பங்களுக்கும் வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள் இலவசமாக வழங்கிட செய்ததும் -இந்தப் பேனாதான்!

(அப்படியே அரசு கேபிளை அறிவித்ததும் இந்தப் பேனாதான். இப்போ அதைப் பத்தி கண்டுகொள்ளாமல் இருப்பது இந்தப் பேனாதான்)

பதவிப் பொறுப்பேற்ற அன்றைய தினமே விவசாயிகளின் கூட்டுறவு கடன் 7000 கோடி ரூபாயை அறவே ரத்து செய்து ஆணையிட்டதும் - இந்தப் பேனாதான்!

ஏழை மகளிர் திருமணம் செய்ய ஏதுவாக இலவசமாக இருபதாயிரம் கொடுக்கும் திட்டத்திற்கு வித்திட்டதும் - இந்தப் பேனாதான்!

கர்ப்பிணிப் பெண்களுக்கு தலா ஆறாயிரம் ரூபாய் வழங்கிட வழி செய்ததும் - இந்தப் பேனாதான்!

ஒரு கோடி ஏழை மக்கள் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததும் - இந்தப் பேனாதான்!

சிறுபான்மையோர் உரிமைக்கும்; சீர் பெறவே அருந்ததியர்க்கும்; செம்மொழியாம் தமிழுக்கும்; சேது சமுத்திரத் திட்டத்திற்கும் கையெழுத்திட்டதும் -இந்தப் பேனாதான்!

(திண்டுக்கல் கூட்டுக்குடி நீர்த்திட்டத்திற்கு திட்டம் தீட்டியதும் இந்தப் பேனாதான். காங்கிரஸ் மேலிடம் கடிந்து கொண்டதால் அதைக் கண்டுகொள்ளாமல் இருப்பதும் இந்தப் பேனா தான்)

தேசத் தியாகிகளை மறவாமல் அவர்கள் செய்த தியாகத்தை மதித்து நினைவுச் சின்னங்களும், மணி மண்டபங்களும், சிலை களும் எழுப்பிட ஏற்பாடு செய்ததும் - இந்தப் பேனாதான்!

(சிலைகள் அமைத்த கையோடு அவர்களை அத்தோடு கழற்றிவிடுவதும் இந்தப்பேனா தான்)

இவ்வாறு

பல்லாயிரம் கோடி திட்டங்களை தீட்டுதற்கும் -

பலகோடி மக்களின் பசிப்பிணி தீர்ப்பதற்கும் -

என் அன்னையின் தாலாட்டை பெரும் பாராட்டாகக் கருதி பாடுபடுகிறவன்தான் இந்தப்பிள்ளை - ஆம், உங்கள் வீட்டுப் பிள்ளை.(ங்க வீட்டுப் பிள்ளை ன்னா அது எம்ஜியார் படமா போயிடும். அதான் தலைவர் பிளேட்ட மாத்திப் போட்டுட்டார்)

அன்னையர் தினம் கொண்டாடி அகம் மகிழ்ந்துள்ள அருமைத் தாய்மார்களே! அவர் தம் குடும்பத்துப் பெரியோர்களே!

பேனா முனையால் பெரும் பெரும் சாதனைகளை -திட்டங்களை -பெற்ற தாயும்

பிறந்த பொன்னாடும்

மகிழ்ந்திட உற்ற உடன்பிறப்புகளின் துணையோடு -

உழைத்து வரும் என் வேண்டுகோளை

ஒரு கணம் சிந்தித்துப் பார்த்து

குழந்தை பருவத்தில் பேனாவை எடுத்தான்;

அதனால் வீணாகப் போகவில்லை நாடும் நாமும்- என்ற நன்றியினைத் தெரிவித்திட

வாய்த்திடும் நாள்தான், மே 13ஆம் நாள்!

 (அதானே பாத்தேன்! தலைவர் சுத்தி சுத்தி கதயச் சொல்லி கடைசியில மே 13 வந்து நிப்பாட்டிட்டாரே! ஏன் தலைவரே, இந்த முறை கல்லக்குடியில் ரயில் மின்னாடி படுத்துக்கெடந்தத எழுத மறந்துட்டியலா?)

இவ்வளவும் செய்து இனியும் செய்யவிருக்கின்ற இந்தப் பேனாதான் -

உதய சூரியன் -கை -நட்சத்திரம் சின்னங்களில் உங்களின் பொன்னான வாக்குகளை அளித்திட வேண்டுகிறது.

இவ்வாறு வழக்கம் போல தனது தேர்தல் நேர கடிதத்தை எழுதி மிக அழகாக வாக்கு கேட்டிருக்கிறார் கலைஞர். நாலைக்குத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் 24 மணி நேரத்திற்கு முன்பே பிரசாரத்தை ஓய்த்துவிட வேண்டும் என தெரிந்தும் இன்று இந்த வாக்க்கு சேகரிப்பு கடிதம் மற்றும்  NO COMMENTS  பகுதியில் உள்ள படங்கள் இன்று வெளியாகியுள்ளது தேர்தல் விதிமுறை மீறலாகாதா? எனக்குத்தெரியலப்பா,,,உங்களுக்குத் தெரிஞ்சா சொல்லுங்கள்

இது மட்டுமல்ல இன்னொரு கடி'தமும் இருக்கு. உங்களுக்கு வேற வேலையே இல்லைன்னா அதப்படிக்க இங்கின கிளிக்குங்க.

1 கருத்து:

karthik சொன்னது…

thalaivar pena eduthar ok.. alagiri siriya kathi thane eduthar?

(question by appavai thamizhan!)