
யோசனை 1: ஓட்டுப்போடாமல் இருந்தால் ரேசன் கார்டினை ரத்து செய்து விடுவோம் என்று சொன்னால் போனால் போகட்டும் என்று விட்டுவிடுவார்கள். அதற்கு பதிலாக தமிழகத்தில் ஒளிபரப்பாகும் எல்லா மெகா சீரியல்களையும் தடைசெய்து விடுவோம் என்று ஒரு உத்தரவைப் போட்டு போட்டால் பெண்களெல்லாம் ஓடி வந்து ஓட்டுப்போடுவார்கள். ஆனால் இது ஆண்களுக்கு மிகச்சாதகமாக அமைந்து விடும். எனவே F Tv, M Tv, Star Movies, AXN மற்றும் மிட் நைட் மசாலாக்களை முழுமையாக தடைசெய்து விடுவோம் என்று சொன்னால் போதும் அவர்களும் பயந்து போய் ஓட்டுப்போட வந்துவிடுவார்கள். 100 சதவிகித முழுமையான வாக்குகளை அள்ளிவிடலாம்.
யோசனை 2: கள்ளஓட்டுப் போடுவதைத் தடுக்க விரலில் மைவைப்பதற்கு பதிலாக ஓட்டுப்பொட்டு முடிந்தவுடன் வாக்காளர்களை வரிசையாக நிற்க வைத்து தலையை மொட்டையடித்து விடலாம். இதனால் கள்ளஓட்டுக்கள் போடுவது முழுமையாகக் தடுக்கப்படும்.. நீங்கள் அடிக்காவிட்டால் எப்படியும் ஜெயிக்கப்போகும் வேட்பாளர் அதைத் தான் செய்யப்போகிறார். முன்கூட்டி செய்வதிலே ஒன்றும் தப்பில்லை.
யோசனை 3: பழைய ராணி காமிக்ஸ் புத்தகத்தில் வரும் மாயாவியின் மண்டையோட்டு முத்திரை மோதிரம் போல ஒரு மோதிரம் செய்து வைத்துக்கொண்டு ஓட்டுப்போட்டு முடிந்ததும் ஓட்டுப்போட்டவரின் முகத்தில் ஓங்கிக் குத்தி மண்டையோட்டு முத்திரையை பதித்து விடலாம். அது அழிய எப்படியும் ஒரு நாள் ஆகும்.
யோசனை 4: ஓட்டுப் போட்டு முடிந்ததும் கருப்புபெயிண்டால் வாக்காளர்கள் நெற்றியில் நாமம் வரைந்து அனுப்பலாம். இதன் மூலம் கள்ள ஓட்டைத் தடுக்கவும் அதுமட்டுமின்றி பொதுமக்களுக்கு மறைமுகமான ஒரு மெசேஜை சொல்லவும் இது பயன்படும்.
யோசனை 5: எலக்சன் பூத்களைச் சுற்றி 50 மீட்டர் சுற்றளவிற்கு உயர்மின்சார வேலிகளை அமைத்து அதை ஓட்டு மிசினில் இணைத்து விடலாம். ஒருவர் மீண்டும் வந்து ஓட்டு மெசினில் கையைவைத்தால் அல்லது ஒருவருக்கு மேற்பட்டோர் ஒரே நேரத்தில் அதிலே கையை வைத்தால் மின்சாரம் தாக்கும், என கிளப்பிவிடலாம். இதனால் பூத்தைக் கைப்பற்றி கள்ள ஓட்டுப்போட வரும் உண்மைத்தொண்டர்கள் உசாராகி எஸ்கேப் ஆகிவிடுவார்கள்.
யோசனை 6: வாக்காளருக்கு நீங்கள் சீனா மையை வைத்தால் அவர்கள் சிங்கப்பூர் குலோரக்ஸ் கொண்டு அதை ஈஸியாக அழித்து விடுகிறார்கள். அதற்குப் பதிலாக ஓட்டுப்போட்டவரின் உள்ளங்கையில் தேர்தல் முத்திரையைப் பச்சை குத்திவிடலாம். இதனால் கள்ள ஓட்டு என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய்விடும்.
யோசனை 7: நீங்கள் என்னதான் விரலில் மைவைத்தாலும் அதை நம் வாக்காளர்கள் மிகச்சுலபமாக அழித்து விடுவார்கள். அதனால் இனிமேல் நகத்தில் மைவைப்பதற்கு பதிலாக ஓட்டுப்போட வரும் வாக்காளரின் வாயைத் திறக்கச் சொல்லி பற்களில் தாரை ஊற்றி கருப்பாக்கிவிடலாம். அந்த கருப்பை அவர்கள் நீக்கி விட்டு வருவதற்குள் எலக்சனே முடிந்துவிடும். அய்யய்யோ! நீங்கபாட்டுக்கு அவசரப்பட்டு கொதிக்கிற தாரை ஊத்திடப்போறிங்க. அப்பறம் எல்லாரும் சேர்ந்து உங்களை ஊடு கட்டிடுவாங்க.
யோசனை 8: பழைய அரண்மனைகளில் இருப்பது போல எலக்சன் பூத்தைச்சுற்றி பெரிய அகழிவெட்டி அதற்குள் நிறைய முதலைகளை விட்டுவிட்டால் யாரும் பூத்தைக் கைப்பற்ற வரமாட்டார்கள்.காரணம் ஏதாவது களேபரம் நடந்து எங்கே அந்தக் குழிக்குள் தள்ளி விட்டு விடுவார்களோ என்ற பயம் தான்.
யோசனை 9: ஓட்டுப் போட்டு முடிந்து வரும் வாக்காளர்களை கைது செய்து வேனில் ஏற்றி ஏதாவது கல்யாண மண்டபங்களில் அடைத்துவிடலாம். வழக்கம் போல மாலை 6 மணிக்கு ரிலீஸ் செய்துவிட்டால் போதும். அதற்குள் எலக்சனும் முடிந்துவிடும். கள்ள ஓட்டு விழவும் வாய்ப்பு இருக்காது.
யோசனை 10: போலீஸ் மோப்ப நாய்களை பூத் வாசலில் அமரவைத்து "குண்டுகளை மோப்பம் பிடித்துக் கவ்வும் இந்த டைகர் , மறுபடியும் யாராவது ஓட்டுப்போட வந்தால் மோப்ப சக்தி மூலம் கண்டுபிடித்து அவர்களை கொத்தோடு புடிங்கிவிடும் " என ஒரு அறிவிப்புப் பலகையை அருகில் வைத்து விட்டால் போதும். அல்லக்கைகள் அலறிஅடித்துக் கொண்டு ஓடிவிடுவார்கள்.
பின்குறிப்பு: இது முழுக்க முழுக்க சிரிப்பதற்கேயன்றி வேறு எந்த நோக்கத்திலும் வெளியிடப் பட்டதல்ல. சிரிப்புவராவிட்டால் நான் பொருப்பல்ல.
2 கருத்துகள்:
ithu muzhukka comedy a irukku vayiru valikka sirithaen.... Thanks pa
யோசனை 3: பழைய ராணி காமிக்ஸ் புத்தகத்தில் வரும் மாயாவியின் மண்டையோட்டு முத்திரை மோதிரம் போல ஒரு மோதிரம் செய்து வைத்துக்கொண்டு ஓட்டுப்போட்டு முடிந்ததும் ஓட்டுப்போட்டவரின் முகத்தில் ஓங்கிக் குத்தி மண்டையோட்டு முத்திரையை பதித்து விடலாம். அது அழிய எப்படியும் ஒரு நாள் ஆகும்.
excellent
கருத்துரையிடுக