ஞாயிறு, 3 மே, 2009

நினைவுகள்: "அவ்வை சண்முகி" -ராயப்பேட்டை ராமு

பெயர்: அவ்வை சண்முகி

வெளிவந்த ஆண்டு : 1996

கதை: கமல்ஹாசன்

வசன‌ம் : கிரேசி மோகன்

இயக்கம் : கே.எஸ் ரவிக்குமார்

நடிப்பு: கமல்ஹாசன், மீனா,ஜெமினி கணேன் நாசர்  

ஒரு காதல் ஒரு குடும்பம் இது இரண்டையும் வைத்து முழுக்க முழுக்க நகைச்சுவையாக படைக்க கிரேஸியை விட்டால் வேறு யாரால் முடியும். அத்தோடு கலைஞானியும் இணைந்து தன் மாறுபட்ட பரிணாமத்தைக் காட்டினால் அது நிச்சயம் அறுசுவை விருந்து தான். அந்த வகையில் முழுக்க முழுக்க காமெடி குடும்ப சென்டிமென்ட் மற்றும் புதுமை நிறைந்த ஒரு படம் தான் அவ்வை சண்முகி. 

தான் காதலித்து மணந்த ஐயர் வீட்டுப்பெண்னுடன் குடும்பம் நடத்தி அவர் நினைக்கும் வாழ்க்கையை அமைத்துக்கொடுக்க முடியாமல் திணறும் ஒரு சாதாரண சினிமா நடணக் கலைஞராக கமல். தன் வீட்டுப்பெருமையை பேசியே வம்பிழுத்து கோர்ட் வரைக் குழந்தையோடு போய் நிற்கும் மீனாவிற்கு விவகரத்து வழங்கி வாரம் ஒருமுறை குழந்தையை தந்தையுடன் அனுப்ப வேன்டும் என உத்தரவிடுகிறது நீதிமன்றம்.அது சரிவராமல் தன் குழந்தைக்காக‌ தன் மாமனார் வீட்டுக்குள்ளேயே ஒரு பிராமண மாமியாக நுழையும் கமல் கொடுக்கும் கலகலப்பு தான் படம் முழுமையும். எந்த பாத்திரைத்தை ஏற்றாலும் அதற்குள் தண்ணீராய் மாறிவிடுவார் நமது கலைஞானி கமலஹாசன். அதுவும் பெண் வேடமேற்க அவரை விடப் பொருத்தமானவர்கள் இதுவரை யாருமில்லை எனலாம். 

நடன உதவியாளாராக சாதாரண வாழ்க்கை நடத்தும் பாண்டியனாக கலக்கியிருக்கும் கமல் தன் பின்னர் சண்முகியாக மாறி நடத்தும் ராவடிகள் கலகல. அதிலும் அவர் வீட்டு ஓனர் முதலியார் மணிவண்ணன் சண்முகியை நோட்டம் விடுவது தெரிந்து அவரிடம் டெல்லி கணேஷ் தான் சண்முகியின் கணவர் என்பது, டெல்லி கணேசிடம் மணிவண்ணன் தான் சண்முகியின் கணவன் என்பது, தனக்கு மேக்கப் போட்ட நாகேஷ் தான் தன் கணவன் என ஜெமினியிடம் சொல்வது, அதனால் ஏற்படும் குழப்பங்கள் அதன் சமாளிபிகேசன்கள் இது முழுக்க கிரேஸியின் கைவண்ணம் என அனைவரும் அறியக் கூடிய கிரேஸி தீவ்ஸ். ஆனாலும் மிகமிக அருமை. என்ன ஒன்று தான் வசன‌ம் எழுதும் படங்களில் ஒரு காட்சியிலாவது தோன்றி ஒரு காமெடியைப் போட்டு விடுவார் கிரேஸி. அது  இந்தப் படத்தில் மிஸ்ஸிங். 

தன் கல்யாணமே ஒரு செட்டிங் கோயிலில் தான் நடந்தது என சொல்லி அறிமுகமாகும் மீனாவின் நடிப்பு பரவாயில்லை ரகம். காரணம் கம்லின் நடிப்பு அனைத்தையும் மிஞ்சி நிற்பதால் மீனாவின் நடிப்பு அங்கே எடுபடவில்லை. கறிக்குழம்பிற்கு கறிவேப்பிலை மாதிரி டூயட் மற்றும் கோப சீன்களுக்கு பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர். இது எங்க தாத்தா சுவாமிநாத ஐய்யர், இது எங்க அப்பா காமேஸ்வர ஐய்யர், நான் விஸ்வ நாத ஐய்யர் அந்த வரிசையில பாண்டி.. என இழுத்து நீட்டி அவரை தன் மகளை விட்டுப் பிரித்து கடைசியில் சண்முகியை நாகேஷிடம் விலைக்கு வாங்கி காதலிலே தோலிவியுற்றான் காளையொருவன் என்ற பாட்டுக்கு முகபாவம் காட்டும் ஜெமினிக்கு ஒரு பெரிய ஓ போடலாம். இந்தப் படத்தில்  கமலுக்கு அடுத்து அவருக்குத் தான் அதிக வாய்ப்பு கிடைத்திருக்கிறது. வீட்டு ஓனராக வந்து ரவுசுக்கொடுக்கும் முதகியாராக மணிவண்ணன். அவரது நடிப்புடன் கூடிய பாடி லாங்க்வேஜ் சிறந்த பலம். சதா  பாட்டிலும் கையுமாக வரும் நாகேஷ் இதிலே மேக்கம் மேனாக கலக்கியிருக்கிறார்.

சண்முகி கெட்டப் போட்டு விட்டு ஆட்டத்தை துவக்கி வைப்பதே அவர் தான். அவர் ஒரு தடவை நகைக்கடையில் சண்முகியைப் பார்த்து அங்கே இங்கே தொட்டு மேக்கப்பை சரிசெய்ய அதக்கண்டு முகம் சுளிக்கும் ஜெமினியிடம் அவர் தான் தன் கணவர் என்று சாமாளிக்கும் இடம் அற்புதம். தனக்குக் கொடுத்ததை நிறைவாக சரியாக செய்து சிரிக்கவும் வைத்திருக்கிறார் நாகேஷ். ஜெமினியின் உதவியாளராக காதில் பூவோடு வலம் வரும் டெல்லி கணேஷ் சண்முகியின் இரகசியத்தைக் கண்டுபிடிக்கச் சென்று மணிவண்ண‌னிடம் அடிவாங்கும் சீன் அபார காமெடி. சிறப்பான நடிப்புடன் கூடிய நகைச்சுவை சரியான பொருத்தம்.

படத்தில் மேலும் ஒரு முக்கிய பாத்திரம் நாசர்.பைவ்ஸ்டார் ஓட்டலில் வேளை பார்த்து விட்டு நடிக்கவேண்டும் என்ற ஆவலோடு ஜெமினியின் வீட்டிற்கு ஐயர் வேடமிட்டு சென்று அங்கு அவர் மாட்டிக்கொண்டு முழிக்கும் போது நல்ல காமெடி. வழக்கம் போல அங்கேயும் கிரேஸி மோகனின் சமாளிபிகேசன் வெளிப்பட்டு சிரிப்பைத் தரும். ஓரிடத்தில் நாசர் முஸ்லீம் எனத் தெரிந்தபின் அவர் ஜெமினியிடம் " சாமி நான் முஸ்லீம்தான் ஆனா சத்தியமா ஊமை என்பார்" அருமையான காமெடி.  அது என்ன மர்மமோ தெரியவில்லை, கமல் படத்தில் நாசரும் நாகேஷும் கட்டாயமாக ஒரு சீனாவது நடித்து விடுகிறார்கள். கமலோடு சேர்ந்து ஆடும் பெண்ணாக வரும் ஹீரா ஊருகாய். எஸ்.பி.பியும் டாக்டராக இரண்டு சீன் வந்து கல‌க்கியிருந்தார். கமலின் குழந்தையாக நடித்த குட்டிப்பாப்பா பேபி.ஆனி  கலக்கியிருந்தாள். 

படத்தின் இசைபரவாயில்லை ரகம். ஜெராக்ஸ் மிசினையே ஜெராக்ஸ் எடுக்கும் தேவா இந்தப்படத்திற்கு இசையமைத்திருந்தார். பாடல்கள் சுமார் ரகம். காதலி காதலி பாடல் ரீங்காரம். இந்தப் படத்தில் பெண்குரலில் பேசி நடித்தது மட்டுமின்றி ருக்கு ருக்கு என்ற பாடலையும் பாடி பிரமாதப்படுத்தியிருந்தார் கலைஞானி. 

இயக்கம் கே.எஸ் ரவிக்குமார். டைட்டிலில் அவர் பெயரைப் போட்டுக்கொண்டாலும் படத்தின் மொத்த இயக்கமும் கமலஹாசன் தான் மேற்கொண்டாராம். தமிழில் நல்ல வெற்றி அடைந்த அவ்வை சண்முகியை இந்தியில் சாச்சி 420 என்ற பெயரில் இயக்கி கையைச்சுட்டுக்கொண்டார் கலைஞானி. ஆக மொத்தத்தில் அவ்வை சண்முகி கலைஞானியின் மற்றுமொரு பரிமாணம்.

மதிப்பெண்கள்: 68/100 

சின்ன அறிவிப்பு: போன நினைவுகளில் (ரமணா) மறுமொழிந்திருந்த திரு .லோகு , திரு.  சென்ஷி , திரு.  Karthikeyan G  , திரு.  Cable Sankar  , திரு.  Sriram,  ஆகியோருக்கு நன்றி. அதிலும் குறிப்பாக நடிகர்/இயக்குனர் ரவிச்சந்திரன் பற்றி அருமையான தகவல் கொடுத்திருந்த திரு. Sriram அவர்களுக்கும் மிக்க நன்றி. மன்னிக்கவும் நேரமின்மை காரணமாக அங்கேயே பதில் கொடுக்க இயலவில்லை. அதிலும் Karthikeyan G ன் ஐஸ்கிரீம் காமெடியை ஒரு பதிவாகப் போடலாம்.

கருத்துகள் இல்லை: