சனி, 30 மே, 2009

இளவரசருக்கு விரைவில் முடிசூட்டு விழா

தமிழக அமைச்சரவையில் உள்ளாட்சித்துறை அமைச்சராக பணியாற்றி வந்த மு.. ஸ்டாலின் துணை முதல்-அமைச்சராக நியமிக்கப்பட்டார். முதல்-அமைச்சர் கருணாநிதி நிர்வகித்து வந்த பொது நிர்வாகம் மாவட்ட வருவாய் அதிகாரிகள், தொழில்கள், சிறுபான்மையினர் நலன், பாஸ்போர்ட்டுகள், சிறப்பு முனைப்புகள், சமூக சீர்திருத்தம் ஆகிய துறைகள் துணை முதல்- அமைச்சர் மு.. ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன.ஏற்கனவே கவனித்து வரும் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையோடு இந்த துறைகளையும் மு.. ஸ்டாலின் கூடுதலாக கவனிப்பார்

மேலும் அவருக்கு அமைச்சரவை வரிசையில் 3-வது இடம் அளிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- 

துணை முதல்-அமைச்சர் மு.. ஸ்டாலின் அமைச்சரவை வரிசையில் முதல்-அமைச்சர் கருணாநிதி, நிதி அமைச்சர் அன்பழகன் ஆகியோருக்கு அடுத்து 3-வது நிலையில் இருந்து பணியாற்றுவார்.

தமிழ்நாட்டில் கடந்த 2006-ம் ஆண்டு தி.மு.. ஆட்சியைப் பிடித்ததும் உள்ளாட்சித்துறை அமைச்சராக மு.. ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். சில மாதங்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு முதுகு தண்டு வடத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் அவரது பணிச் சுமைகளை குறைக்கும் வகையில் அமைச்சர் மு..ஸ்டாலின் செயலாற்றி வந்தார்

பாராளுமன்றத்துக்கு சமீபத்தில் தேர்தல் நடந்த போது தமிழ்நாடு, புதுவையில் உள்ள 40 தொகுதிகளுக்கும் அமைச்சர் மு..ஸ்டாலின் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டினார். முதல்வரின் பிரதிநிதியாக உங்களை வந்து சந்திக்கிறேன். அவரது சாதனைகளுக்கு வாக்களியுங்கள் என்றார். அமைச்சர் ஸ்டாலினின் இந்த தீவிர பிரசாரத்தால் தி.மு.. கூட்டணி தமிழ்நாட்டில் கணிசமான வெற்றியை பெற்றது

இந்த நிலையில்  தமிழகத்தின் துணை முதல்வராக மு..ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கவர்னர் மாளிகையில் இன்று மதியம் வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:- 

முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு..ஸ்டாலினை துணை முதல்வராக கவர்னர் நியமனம் செய்து அறிவித்துள்ளார்.இதுவரை முதல்- அமைச்சர் கவனித்து வந்த பொது நிர்வாகம், மாவட்ட வருவாய் அதிகாரிகள், தொழில், சிறுபான்மை நலம், பாஸ்போர்ட், சமூக சீர்திருத்தம் ஆகிய துறைகளை மு..ஸ்டாலின் கவனிப்பார்.இனி அமைச்சர் மு..ஸ்டாலின் துணை முதல்-அமைச்சர் என்றழைக்கப்படுவார். 

துணை முதல்வர் என்றழைப்பதற்கு பதில் இளவரசர் என்று அழைக்கலாம். ஒழிந்து போன மன்னர் ஆட்சியை மீண்டும் கொண்டுவந்த பெருமை மாமன்னர் கலைஞரையே சாரும்

இது குறித்து மாமன்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில் 

கடந்த பிப்ரவரி திங்களில் இருந்து சுமார் நான்கு மாத காலமாக என் உடலில் தவிர்க்க முடியாததும் அபாயம் நிறைந்ததுமான முதுகுத்தண்டு வட அறுவை சிகிச்சை நடைபெற்று, அதன் தொடர்ச்சியாக உடல் நலிவுற்று-இன்னமும் நடக்க முடியாமல், சக்கர நாற்காலியில் தான் சென்று நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டிய நிலைமை உள்ளது

தேர்தல் பிரசாரத்துக்காக திருச்சி கூட்டத்திற்கு சென்றதாலும்-வேறு சில மண விழாக்களில் பங்கேற்றதாலும் மீண்டும் உடல் நலிவுற்று-திரும்பவும் மருத்துவமனையில் பத்து நாட்களுக்கு மேல் சிகிச்சை பெற வேண்டியதாயிற்று. தேர்தல் பிரசாரக்கூட்டங்களைத் தவிர்க்கவும் ஒரு சூழ்நிலை உருவானதை அனைவரும் அறிவர்

இந்த உடல் நலிவுடன் அரசு நிர்வாகப்பணிகளில் முழு கவனம் செலுத்த இயலவில்லை. வாரம் ஒன்றுக்கு நூறு கோப்புகளுக்குக்குறையாமல் பார்த்து முடிவெடுக்க வேண்டியுள்ளது. மேலும் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பல்வேறு வாரியப்பணிகள் மற்றும் அரசுத்துறை பணிகளை எல்லாம் அன்றாடம் கலந்து பேசி முடிவெடுத்து செயல்பாடுகளை நேரில் சென்று பார்வையிட்டு கவனிக்க வேண்டிய அவசியமும் உள்ளது. எனவே இந்தப்பணிகளை நமது நிதியமைச்சர் பேராசிரியர் ஏற்று நடத்த முடியுமா என்று அவரிடம் விவாதித்ததில் அவருக்கும் உடல் நிலை இடந்தராத நிலைமையை எடுத்துச்சொல்லி, அதன் பிறகு நாங்கள் இருவரும் கலந்து பேசி இரண்டொரு முக்கிய துறைகளின் பொறுப்புகளை மட்டும் நான் வைத்துக் கொள்வதென்றும் பேராசிரியர் அவையின் முன்னவராகவும், நிதி அமைச்சராகவும், தொடர்வதென்றும், எங்கள் இருவருக்கும் அடுத்து இப்போது பகிர்ந்தளிக்கப்டுகிற இலாக்காக்களையும் பொறுப்பேற்று துணை முதல்வர் என்ற நிலையில் மு..ஸ்டாலின் செயல்படுவதென்றும் முடிவு செய்து அதற்கான அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

என ஒன்றுமே தெரியாத அப்பாவியாக ஒரு அறிக்கையை விட்டிருக்கிறார் கலைஞர். மூத்த இளவரசருக்கு மேலே பட்டம் சூட்டிவிட்ட பிறகு இப்போது இளைய இளவரசருக்கு கீழே பட்டம் சூட்ட தயாராகி விட்டார் மாமன்னர் கலைஞர். அதெல்லாம் சரி கலைஞரின் குடும்ப நலத்துறையை இனிமேல் யார் கவனிப்பார்கள்

கொடுமையிலும் கொடுமை என்ன ஞானத்தங்கமே..,அது கலைஞரோட குடும்பம் தானே ஞானத்தங்கமே!

கருத்துகள் இல்லை: