செவ்வாய், 19 மே, 2009

ஈழப்பிண வியாபாரிகளைப் புறக்கணிப்போம்

உலகம் காணாத ஒரு படுபாதகப் படுகொலைகளை அறங்கேற்றிவிட்டு இன்று வெற்றிக்களிப்பிலே  வெடிவெடித்துக் கொண்டிருக்கிறார்கள் ஒருபுறம். நாளைய பொழுது எப்படி விடியும், இன்று இரவாவது கொஞ்சம் நிம்மதியாக  வலிகளின்றி உறங்கமுடியுமா?, நாளைக்கு எப்படி சாப்பாடு கிடைக்கும்? என்று சிந்திக்கும் ஒரு ‍பரிதாபக் கூட்டம் மறுபுறம் என இலங்கையின் ஒவ்வொரு பகுதி மக்களும் ஒவ்வொரு சிந்தனையில் உறைந்து கொண்டிருக்கிறார்கள். மறுபுறம் புலம்பெயர்ந்த இலங்கையின் தமிழ் மக்கள் தங்கள்  ஆர்ப்பாட்டங்களை முழுமூச்சாய் நடத்திக்கொண்டிருக்கின்றார்கள். 

உண்ணாவிரதம் ஒருபுறம், ஆர்ப்பாட்டம் மறுபுறம் என லண்டன் உள்ளிட்ட நாடுகளில் பல‌ நடத்தி மற்றய நாடுகளின் கவனத்தை தங்கள் பக்கம் ஈர்க்கும் முயற்சியிலே ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுடைய இந்த ஆர்ப்பாட்டங்களை நேரடி ஒளிபரப்புச் செய்தும் அந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வெளியிட்டும் சில தொலைக்காட்சிகள் பணிசெய்து வருகின்றன. அந்த வகையில் ஐரோப்பிய ராச்சிய பகுதிகள் குறிப்பிடத்தக்க தமிழ்ச்சேவைத் தொலைக்காட்சிகள் இந்தியத் தொலைக்காட்சிகளைத் தவிர்த்து மொத்தம் 3. ஒன்று சமீபத்தில் தொடங்கப்பட்ட சிஐ டிவி.அடுத்ததாக பலகாலமாக தன் ஒளிபரப்பைச்செய்து வரும் தீபம் தொலைக்காட்சி. மூன்றாவது ஜீடிவி(குளோபல் தமிழ் விசன்). 

இதிலே சிஐ டிவி முழுக்க முழுக்க இந்தியாவின் ஜெயாடிவியை மீள் ஒளிபரப்புச்செய்து வருகிறது. இலங்கை சம்பந்தமான எதையும் ஒளிபரப்புவதில்லை. தீபம் தொலைக்காட்சி பலகாலங்களாக ஈழத்தமிழர் பிரச்சினையை முன்வைத்து பிரசாரம் செய்து வருகின்றது. தீபத்தினைப் போல மற்றொரு தொலைக்காட்சி தான் இந்த ஜீடிவி ஆகும். மற்ற‌ தொலைக்காட்சிகளை ஒப்பிடும் போது ஜீடியின் சேவையை நாம் குறைத்து மதிப்பிட முடியாது தான். ஆனால் அவர்கள் ஈழப்ப்பிரச்சினையை வைத்து ஒரு வியாபாரம் போல நடத்திக்கொண்டிருப்பதையும் மறுத்து விடமுடியாது. 

அதாவது புலம்பெயர்ந்த தமிழர்களை அடிப்படையாக வைத்து ஆரம்பிக்கப் பட்ட தீபமும் ஜீடிவியும் இலங்கைத் தமிழர் பிரச்சினையை மிகைப்படுத்திக் காட்டுவதாக இலங்கையின் முக்கிய ஊடகம் ரூபாவாஹினி மகிந்த ராஜபக்சேயிடம் முறையிட்டது. அதாவது அந்த‌ நேரம் இலங்கையிலே போர் உச்சகட்டத்தை அடைந்து தமிழக மக்கள் கொத்துக்கொத்தாக கொன்று குவிக்கப்பட்டுக்கொண்டிருந்த நேரம். அவர்கள் தங்கள் நாட்டுக்கு எதிராக பொய்பிரசாரம் செய்வதாக உலக அமைப்புகளிடம் புகாரும் அளித்தார்  மகிந்த ராஜபக்சே. அது மட்டுமின்றி  ரூபாவாஹினி மேற்பார்வையில் ஏற்கனவே உறங்கிக் கொண்டிருந்த டான் டிவியை தூசித் தட்டி டான் தமிழ் ஒளி என்ற பெயரில் தனது எதிர்பிரச்சாரத்தை தொடங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.  அதன்மூலம் முழுக்க முழுக்க அங்கே நடக்கும் ராணுவ நடவடிக்கைகளையும் தமிழர் பகுதிகளில் செய்யப்படும் நலத்திட்ட உதவிகளையும் செய்திகளில் போட்டு மேற்கண்ட தொலைக்காட்சிகளின் பிரச்சாரத்தை முடக்கியது ரூபாவாஹினி குழுமம். 

தீபம் தன் பணிகளை சரியாக செய்துகொண்டிருந்த நிலையில் போர் உச்சகட்டத்தை அடைந்த போது இந்தச் சூழ் நிலையை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஜீடிவி திடீரென தனது சேவையை கட்டண சேவையாக அறிவித்தது. தொடங்கும் போதே கட்டணச்சேவையாகத் தான் தொடங்கப்பட்டிருந்தாலும் போர் உச்சகட்டத்தை அடைந்துகொண்டிருக்கும் போது தாயக நிலையை கருத்தில்கொண்டாவது அந்தத் திட்டத்தை ஒத்திவைக்கவில்லை ஜீடிவி. அவர்கள் முழுக்க முழுக்க ஈழத்தமிழர்களின் பிணங்களைக் காட்டியே தங்களை வளர்த்துக்கொண்டனர் என்பதிலே எள்ளவும் சந்தேகம் இல்லை. அவர்களின் முக்கிய நோக்கமே பணம் பார்ப்பதாகத் தான் இருந்திருக்கிறது. இந்த நிலையில் கடந்த வாரம் முழுக்க கட்டணச்சேவையாக மாற்றப்பட்டது ஜீடிவி. 

ஆனால் திடீரென மீண்டும் இலவச சேவை என அறிவித்தது ஜீடிவி. தாயக நிலை கருதி புலிகளின் தலைமை கேட்டுக்கொண்டதால் அல்லது மிரட்டப்பட்டதால் தான் ஜீடிவி தனது சேவையை மீண்டும் இலவச சேவையாக அறிவித்தது என ஒரு செய்தியும் கசிய ஆரம்பித்தது. இந்த நிலையில் தேசியத் தலைவர் பிரபாகரன் நேற்று சுட்டுக்கொலை செய்யப் பட்டதாக அறிவிப்பு வந்தவுடன் தன் இலவச சேவையை சத்தமே இல்லாமல் மீண்டும் கட்டணச் சேவையாக மாற்றிவிட்டது ஜீடிவி. நேற்று மற்றைய இலங்கை ஊடகங்கள் பிரபாகரன் சுட்டுக்கொல்லப்பட்டு இறந்துவிட்டதாகத் தகவல்களை வெளியிட்டன.  தீபம் டிவியில் புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகத் தகவல் வெளியானது. ஆனால் தொடந்து ஜீடிவி மௌனம் சாதித்தது. 

இதிலிருந்தே புரியவில்லையா? எந்தச் சூழ்நிலையை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது ஜீடிவி என்று.யுத்த காலங்களில் தன் ரேட்டிங்கை வளர்த்துக்கொண்ட ஜீடிவி இன்று ஒரு முக்கியத் தமிழ் தொலைக்காட்சியாக தன்னை அடையாளம் காட்டிக்கொண்டிருக்கிறது. யுத்த நேரத்தில் தமிழ்சொந்தங்களின் இரத்தத்தையும் சதையையும்,பிணங்களையும் வைத்தே வளந்த அது இன்று வருட சந்தாவைப் பெற்றுக் கொள்ள கூவி அழைக்கிறது. 

புலம்பெயர்ந்த தமிழர்களே! ஐரோப்பிய ஐக்கிய ராச்சிய மற்றும் மத்தியக் கிழக்கு வாழ் தமிழர்களே! நீங்கள் சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிக்கு சந்தா அட்டை வாங்கினாலும் பரவாயில்லை. போரின் கடைசிக் கட்டத்தை தனக்குப் பயன்படுத்திக் கொண்டு முன்னேற நினைக்கும் இந்த ஜீடிவியை மட்டும் புறக்கணியுங்கள். மேலும் இது குறித்த தகவல் ஏதேனும் உங்களுக்குத் தெரிந்தால் தெரியப்படுத்துங்கள். 

நன்றி:

நண்பர் திரு.திலீபன் குமார்

நோர்வே

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

பெயரில்லா சொன்னது…

ஈபிஆர்எல்எப் தலைவர் பத்மநாபாவிலிருந்து ராஜீவ் காந்தி ஆத்மா வரை இனி சாந்தியடையும்

திலீபன் சொன்னது…

நண்பா கபாலி! நான் கதச்ச விடயங்களில் பாதியைக் காணமே? என்ன ஆச்சி, ஜீ ரிவி பத்தி மட்டும் தான எழுதியிருக்க. மீதம் சொன்னதெல்லாம் எங்கே? எடிட் செய்யறேன் எண்டு பாதியை முழுங்கிப்போட்டாயே!