வியாழன், 14 மே, 2009

கருத்துக் கணிப்பா? கருத்துத் திணிப்பா?

நேற்று நடந்த  நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. புதுச்சேரியில் 80 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தமிழகத்திலேயே அதிகபட்சமாக கரூரி்ல் 80 சதவீதமும் மதுரையில் 76.6 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. (மதுரையில் 100 சதவிகிதம் கூட பதிவாகியிருக்கும், தலைவர் கேட்டுக்கொண்டதால் ஏன் வம்புன்னு இத்தோட நிறுத்திக்கிட்டாங்களாம்) 

மழைவிட்டாலும் தூவானம் நீடிக்கும் என்ற கதையாக எலக்சன் முடிஞ்சாலும் கருத்துக்கணிப்புத் திருவிழா ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை நீடிக்கும். நம்ம பதிவர்கள் வட்டத்தில் போட்டிருக்கக் கூடிய கருத்துக் கணிப்புகளுக்கு நேர் மாற்றமாக பெரிய பெரிய தொலைக்காட்சி நெட்வொர்க்குகள் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளன. அதாவது தமிழகத்தில் திமுக கூட்டணி பிரம்மாண்ட வெற்றி பெறும் என்று அவ்ர்கள் தங்கள் கணிப்புகளில் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் NDTV நடத்திய கருத்துக் கணிப்பில் அதிமுக கூட்டணிக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் மொத்தமுள்ள 39 இடங்களில்

திமுக கூட்டணிக்கு 20 இடங்களும்,

அதிமுக கூட்டணிக்கு 18 இடங்களும்

மீதமுள்ள ஒரு இடத்தில் வேறு கட்சி வெல்லும் என அதில் கூறப்பட்டுள்ளது.. அந்த ஒன்று ஒருவேளை பாஜகவின் வேட்பாளராக இருக்கலாம் அல்லது மமகவின் வேட்பாளராக இருக்கலாம். (ஒரு வேள அது கார்த்திக்கா இருக்குமோ), அதே நேரத்தில் தேமுதிக வுக்கு ஒரு இடமும் கிடைக்காது என்றும் அந்தக் கணிப்பிலே கூறப்பட்டுள்ளது. 

STAR NEWS சேனல் நடத்திய கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணிக்கு 25 இடங்கள் கிடைக்கும் என்றும், அதிமுக கூட்டணிக்கு 14 இடங்களே கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் INDIA TV வெளியிட்டுள்ள எக்ஸிட் போல் கருத்துக் கணிப்பில் அதிமுக கூட்டணிக்கு 26 இடங்களில் வெற்றி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இப்படியாக இது கருத்துக் கணிப்பா அல்லது கருத்துத் திணிப்பா என்று கேட்கும் அளவிற்கு திமுக கூட்டணி மட்டுமே பிரம்மாண்ட வெற்றிபெறும் என மேற்கண்ட தொலைக்காட்சிகள் தெரிவித்துள்ளன. (ஒரு வேள திமுக ஆட்களா பாத்து கருத்துக் கேட்டிருப்பாங்களோ) ஏன் அவசரம் இன்னும் ஒரு நாள் ஒரே நாள். தெரிந்துவிடும் ஜெயிக்கப் போவது யார் என்று. 

யார் ஜெயித்தாலும் அப்படியே சொன்னதையெல்லாம் செய்துவிடப் போவதில்லை. தேர்தலுக்கு அவர்கள் கொடுத்திருந்த வாக்குறுதி புத்தகத்தை அவர்களிடமே கொண்டு போய் காட்டினாலும், அட இது என்ன? எங்கயோ பாத்த மாதிரி இருக்கே என்பார்கள். அதையும் மீறி இதுதான் நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளின் பட்டியல் என்று சொன்னால் அது தான் தேர்தல் முடிஞ்சிருச்சே தம்பி, அதப் பத்தி ஏன் மறுபடியும் கிளறுறீய. அடுத்த எலக்சன் வந்தா பாத்துக்கலாம் நான் இப்போ ரொம்ப பிசி என்பார்கள்.  

ஆக ஓட்டுக் கேட்பதோடு அரசியல்வாதிகளின் வேலை முடிந்துவிட்டது. அதற்கு மேல் அவர்கள் எதுவும் செய்வதும் செய்யாமல் இருப்பதும் அவர்கள் இஷ்டம். அது மாதிரி ஓட்டுப்போடுவதோட உங்க வேலை முடிஞ்சிபோச்சி. கல்யாணம் ஆன புதுப்பொண்டாட்டிய தலைல தூக்கிவச்சி ஆடிட்டு கொஞ்ச நாள் கழிச்சி நாயே பேயேன்னு திட்டுற மாதிரி, இனிமே நீங்க ஏதாவது குறைஇருக்கு அப்டின்னு மணுவ எழுதி தூக்கிட்டு போயி அவங்க முன்னாடி நின்னாலும் அந்த மணுவை நிச்சயமாக வாங்கிக்கொள்வார்கள்.உட‌னே அங்க நிக்கிற செக்யூரிட்டி உங்க கையப் பிடிச்சி இழுத்துகிட்டு வந்து "யோவ் அதான் மணுவ குடுத்திட்டியல்ல, அப்பறம் உனக்கு இங்க என்னய வேல, போயா அந்தப் பக்கம்னு, அதல்லாம் அய்யா பாத்து செய்வாரு" அப்டின்னு ஒரு நாய வெரட்டுற மாதிரி உங்கள வெரட்டுவாரு. 

கொஞ்ச நாள் கழிச்சி நீங்க பீச் பக்கம் போயி அங்க விக்கிற தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல ஒரு பொட்டலம் வாங்கி சாப்பிட்ட பிறகு அந்தப் பேப்பர எங்கயோ பாத்த மாதிரி இருக்கேன்னு பிரிச்சிப் பாத்தா அது நீங்க குடுத்த அதே மணு தான். சரி சரி இன்னும் கொஞ்ச நாளைக்கு உங்களை யாரும் கண்டுக்க மாட்டாங்க. அதுக்கப்பறம் கொஞ்ச நாள்ள மறுபடியும் சட்டமன்ற எலக்சன் வந்துடும், அப்ப மறுபடியும் ஒரு குரல் கேட்கும் 

"பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய வாக்காளப்பெருங்குடி மக்களே, உங்கள் பொன்னான வாக்குகளை உங்கள் வீட்டுப்பிள்ளையாம் கொருக்குப்பேட்ட கொண்ண வாயன்னுக்கு கொரங்கு சின்னத்திலே முத்திரையிட்டு தாரீர் தாரீர் என‌ உங்கள் பொற்பாதம் தொட்டு கேட்டுக்கொள்கிறோம்"

உலகமடா உலகமடா உன்மேல கல்வீசும்‍-உடையாதே

நீ காத்து,

ஓடிவந்து ஓடிவந்து ஒரு நாள் தான் பூச்சூட்டும்-மயங்காதே

அதப் பாத்து

2 கருத்துகள்:

ers சொன்னது…

மீதமுள்ள ஒரு இடத்தில் வேறு கட்சி வெல்லும் என அதில் கூறப்பட்டுள்ளது.. அந்த ஒன்று ஒருவேளை பாஜகவின் வேட்பாளராக இருக்கலாம் அல்லது மமகவின் வேட்பாளராக இருக்கலாம். (ஒரு வேள அது கார்த்திக்கா இருக்குமோ),



அதானே... கார்த்திக்கை பத்தி நீங்க குறைச்சு எடை போட்டிட்டிங்களோன்னு நினைச்சேன்.

கிரி சொன்னது…

//மீதமுள்ள ஒரு இடத்தில் வேறு கட்சி வெல்லும் என அதில் கூறப்பட்டுள்ளது.. அந்த ஒன்று ஒருவேளை பாஜகவின் வேட்பாளராக இருக்கலாம் அல்லது மமகவின் வேட்பாளராக இருக்கலாம். (ஒரு வேள அது கார்த்திக்கா இருக்குமோ),//

ஒருவேளை விஜய டி ராஜேந்தர்????