ஞாயிறு, 3 மே, 2009

திலீபன் கல்லறைக்குப் பக்கத்திலே கலைஞர்?

தலைவர் கலைஞர் வெளியிடும் தேர்தல் நேர கடிதங்களைப் படிக்கும் உடன்பிறப்புகள் அப்படியே அழுது விடுவார்கள். அந்த அளவிற்கு கண்ணீரை மையாக்கி எழுதுவார். சில நேரங்களில் மக்களும் மயங்கி ஓட்டுப்போட்டுவிடுவார்கள். அது எப்டித்தான் எலக்சன் டையத்துல மட்டும் இப்படி ஒரே முகாரி ராகமா பாடிக்கிட்டிருக்காரோ நமக்குத் தெரியல. இந்த நிலையில திருச்சிக் கூட்டம் முடிஞ்சிம் முடியாத கையுமா ஒரு கடித்தத வடிச்சி உடன்பிறப்புகள கண்ணீர் விட வச்சிருக்குறாரு தலைவர். 

அதிலும் இந்த மொற கொஞ்சம் கிளிசரின் ஜாஸ்தியாவே தட்டுப்படுது. பேசாம நம்ம தலைவர் கலைஞர் எழுதுற கடிதங்கள நேரே கொண்டு போய் ராஜபக்சேவிடம் (மொழி பெயர்த்து) படிச்சிக்காட்டுனம்னா இந்த கடித வரிகளைக் கேட்டு வாழ்க்கையை வெறுத்து அந்தாளு புத்த துறவியா போகக்கூட வாய்ப்பு இருக்கு. அப்பேர்பட்ட கடிதம் என்னதுன்னா வருது பாருங்க பின்னால..

விடியலுக்கு முன்பே திருச்சியிலிருந்து எழுதுகிறேன் இந்தக் கடிதம்- அந்த ஏப்ரல் 27 அதிகாலை ஐந்து மணிக்கு படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்து விட்டேன். அதுவரையில் நான் தூங்கிக் கொண்டிருந்தால் அல்லவா; எழுந்து உட்கார்ந்தேன் என்று சொல்ல முடியும். இரவு முழுவதும்தான் உறக்கம் கிடையாதே! இரவு 10 மணி அளவில் தொலைபேசி மணி அடித்தது. தம்பி கவிப்பேரரசு பேசினார். இலங்கையிலிருந்து ஏதாவது செய்தி உண்டா என்று கேட்டார். எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்-இந்தப் பதிலுடன் நிறுத்தி விட்டேன். மீண்டும் இரண்டொரு செய்தியாளர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டனர். "நல்ல சேதியையே எதிர்பார்ப்போம்'' என்று ப.சிதம்பரம் சந்திப்புக்குப் பிறகு; "நல்லதே நடக்குமென நம்புவோம்'' என்றீர்களே; அது என்ன ஆயிற்று? என்பதே தொடர்ந்து கேள்விகளாக ஒலிக்கத் தொடங்கின. 

இன்று ஓர் இரவு பொறுத்திருந்து பார்ப்போம் என்றேன். என் மனோநிலை இரவு உணவு எடுத்துக் கொள்ள இடந்தரவில்லை. சுருண்டு கொண்டு படுத்தேன். என் அவசர அவசிய உதவிகளுக்காக என்னுடன் இருந்த மருத்துவ நண்பர் ஜம்பு என் முகத்தைப் பார்த்து விட்டு; "என்ன தலைவரே; இன்று காலை முதல் ஏதோ கவலையில் இருக்கிறீர்கள்?'' என்று கேட்டபோது "ஒன்றுமில்லை ஜம்பு- உடல் நிலையைப் பற்றிய வேதனை தான்'' என்று கூறி சமாளித்துக் கொண்டேன். ஆனால் என் காதுகளில் கடந்த காலத்தில் என்னுடன் நேச பாசத்துடன் பழகிய நண்பர்கள் சிலர் பொதுமேடைகளில் என்னைப் பற்றிப் புழுதி வாரித் தூற்றுகின்ற அந்த ஒலி முழக்கம்; ஓராயிரம் உளி கொண்டு தாக்குவது போலிருந்தது. 

தமிழ்ப்பால் குடித்து வளர்ந்து, 13-ஆம் வயதிலேயே எனக்கும் என் போன்ற இளைஞர்கள் சிலருக்கும், தமிழ் வேல் வடித்துக் கொடுத்து; "ஓடி வந்த கட்டாய இந்திப் பெண்ணே கேள்; நீ தேடி வந்த கோழையுள்ள நாடிதல்லவே! வாருங்கள் எல்லோரும் இன உணர்வுப் போருக்குச் சென்றிடுவோம் வந்திருக்கும் இந்தித் திணிப்பை விரட்டித் திரும்பிடுவோம்'' என்று நான் இயற்றிய பாடலை நாள்தோறும், திருவாரூர் தெருக்களில் குழு முழக்கமாக இசைத்துக் கொண்டு, புலி, வில், கயல் பொறித்த கொடிகளைத் தோளில் தாங்கி- இந்தி ஆசிரியரால் அடிபட்டு விரட்டப்பட்டு, அல்லற்பட்ட அந்தக் காலத்திலிருந்து பெரியாரின் பிள்ளையாக அண்ணாவின் தம்பியாக வளர்ந்து விட்ட எனக்கு; அவர்கள் வழங்கிய வலிமையும், உறுதியும், வாய்மையும் எப்படி என்னை விட்டு அகன்று விடும்? பாலப் பருவம் கடந்தும் பல தடவை; எனக்குப் பாலுடன் கலந்தூட்டிய என் தமிழுக்காக அளவிட முடியா அடக்கு முறைகளைத் தாங்கியிருக்கிறேன். 

பாதி இரவில் என்னைக்கைது செய்து, பாளையங்கோட்டை சிறைக்கு அழைத்துச் செல்லும் வழியில்- மதுரை ராணுவ முகாமில் நான் நெஞ்சு வலியால் துடித்தபோது- சிகிச்சையளித்து, அந்த இரவோடு இரவாக பாளைச்சிறையில் கொண்டு போய்- அங்கே 24 கொட்டடிகள் காலியாக இருக்க - ஒரே ஒரு கொட்டடியில் என்னைத் தன்னந்தனியாக அடைத்து வைத்தார்கள். ரயில் ஓட்டியவர் ஒருக்கணம் மனத்தைக் கல்லாக்கிக் கொண்டிருந்தால்-நானும், முல்லை சத்தியும், கஸ்தூரிராஜும், குழந்தைவேலனும், குமாரவேலனும் கல்லக்குடியில் தண்ட வாளத்தில் தசைக்குன்றுகளாகத்தான் காட்சியளித்திருப்போம். தமிழ் காத்திடத் தண்டவாளத்தில் தலை வைத்தமைக்காக அரியலூர் நீதிபதி அளித்த தண்டனை ஆறு மாதக் கடுங்காவல். இலங்கையில் 1956-ல் தந்தை செல்வா தொடங்கிய தமிழர் சமஉரிமைக் கானப் போராட்டத்திற்கு ஆதரவளித்து அண்ணா முன்னிலையில் சிதம்பரம் பொதுக் குழுவில் தீர்மானம் கொண்டு வந்து, அதைப் பொன்னம்பலனார் வழிமொழிந்திட- அதனையொட்டி நான் செய்த அறப்போர் முழக்கம் இன்னமும் எல்லோரின் செவிகளிலும் எதிரொலித்துக் கொண்டு தானே இருக்கிறது

1983-ல் இலங்கை வெலிக்கடை சிறைச் சாலையில்-குட்டிமணியைக் குருடாக்கி கொன்று குவித்தபோதும்-ஜெகன், தங்கதுரை போன்றோர் செத்தொழிந்த போதும்- அரை நாள் அறிவிப்பில் சென்னை குலுங்கிட ஆறு லட்சம் பேர் நடத்திய அணிவகுப்புக்குத் தலைமை தாங்கியதும்- அகிலஇந்தி யத் தலைவர்கள் வாஜ்பய், என்.டி.ராமராவ், பகுகுணா, ராம்வாலியா, உபேந்திரா, ஜஸ்வந்த் சிங், ராச்சையா போன்றவர்களை மதுரை டெசோ மாநாட்டுக்கு அழைத்து, தமிழ் ஈழம் மலர்வதற்கு வலியுறுத்தியதும்- அதனைத் தொடர்ந்து போராளிகளுக்குள் ஏற்பட்ட பூசல்களால்; சபாரத்தினம் முதல் சமரச சன்மார்க்க சீலராம் அருமை நண்பர் அமிர்தலிங்கனார் வரையில் சவங்களாக்கப்பட்டதும்- இந்தத் தமிழ் நெஞ்சில் ஆணிகள் கொண்டு அடித்து இன்னமும் ரத்தம் வழியும் காயங்கள் அல்லவா? இந்தி யாவின் ஈடற்ற இளந் தலைவர் ராஜீவ் காந்தியை வீழ்த்தி சின்னாபின்னப்படுத்திய பிறகும் - அதற்கு முன்பே சட்டமன்றப் பதவிகளை இலங்கைப் பிரச்சினைக்காகத் துறந்த எனக்கும், எனதருமைப் பேராசிரியருக்கும் எத்தகைய துயரம் ஏற்பட்டு எங்களைத் துவள வைத்தது என்பதை யார் அறிவார்

வெறுக்கத்தக்கதும்-வேண்டத் தகாததுமான இத்தனை கொடுமைகளுக்கும் விடுதலைப் போர் என்று பெயரிட்டு அழைத்தாலும்-இலங்கையில் விடுதலைப் போர்- இங்கேயிருந்து ஆதரவு தரும் தமிழர்களுக்கு கெடுதலை உருவாக்கும் காரியமன்றோ செய்கின்றார்; களத்தில் நிற்போரிடம் கள்ள உறவு வைத்துக் கொண்டு! எல்லோரும் ஒன்றாய்க் கூடி இலங்கைத் தமிழர்க்கு ஆதரவு தரும் கூட்டு முயற்சிக்கு இங்கே வேட்டு வைத்தது யார் என்று; திருச்சி கூட்டத்தில் தம்பி திருமாவளவன் அடுக்கடுக்கான ஆதாரங்களை வரிசைப்படுத்தினாரே 

1.அனைத்துக் கட்சிகளின் கூட்டத்திற்கு வர மறுத்தவர் யார்?. 

2.மனிதச் சங்கிலிக்கு வர மறுத்தவர் யார்?. 

3.டெல்லியில் பிரதமரைச் சந்திக்க வர மறுத்தவர்கள் யார்?. 

4. உண்ணாவிரதங்களை கபட நாடகம் என்றுரைத்தவர் யார்?. 

5.ஈழ விடுதலைக்காக அடுக்கடுக்கான போராட்டங்களை நடத்திய தலைவர் கருணாநிதி அல்லவா? இப்போது நீலிக் கண்ணீர் வடிப்போர் இது வரை ஈழத் தமிழ் சொந்தங்களுக்காக கண்ணீர் வடித்ததுண்டா

6.இப்போது ஈழம் வாங்கித் தருகிறேன் என்பவர் தேர்தலுக்குப் பிறகு அதைப் பற்றிப் பேசுவாரா?. 

7. ஒரு சில இடங்களுக்காகத்தான் அந்த அணியோடு கூட்டணி சேர்ந்தார்களே தவிர, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பார் என்று நினைத்தா தோழமை கொண்டார்கள்

என்றெல்லாம் அடுக்கடுக்காக கேள்விகளைத் தொடுத்தார் திருமாவளவன். நாடாளுமன்றத் தேர்தல் தேதி நெருங்கியவுடன்; இலங்கையில் படையெடுத்து ஈழத்தை அமைப்போம் என்று இன்றைக்கு எக்காளமிடுகிறாரே; இவருடைய கூட்டணிக் கட்சியாம் கம்யூனிஸ்ட் சீனா கை கட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்குமா? இத்தகையோர்  கோமாளி நடவடிக்கைகளுக்கிடையே அங்கே இலங்கையில் போரில் சிக்கி அவதிப்படும் தமிழர்களைக் காத்திட நமது ஒரு உயிர் பயன்பட்டால் என்ன என்று எடுத்த முடிவுதான்- யாருக்கும் தெரிவிக்காமல் நான் மேற்கொண்ட உண்ணா நோன்பு. 

வீட்டில் உள்ளவர்களும்-நாட்டில் உள்ள உடன்பிறப்புகளும்-உங்களிடம் அறிவிக்காமல் மேற்கொண்ட இந்த அறப் போருக்காக என்னைப் பொறுத்துக் கொள்ளுங்கள். ஆனால் ஒன்று; அன்று வெற்றி பெற்றதால் இன்று உம்மோடு இருக்கிறேன். இல்லையேல் விருதுநகர் சங்கரலிங்க நாடார் கல்லறையின் அருகில் -ஈழத்து திலீபன் கல்லறைக்குப் பக்கத்தில் தான் இருந்திருப்பேன்- இது என்தமிழ் மீது சத்தியம்- அண்ணா, அய்யா மீது ஆணை என்பதை மட்டும் அறிந்திடுக! எல்லாம் ஓரளவு நன்மையாக முடிந்த வரையில் சரி என்று கூறியுள்ளார் தலைவர் கலைஞர். 

ஆரியக்கூத்தாடினாலும் தாண்டவக்கோனே..,, காசு காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே! உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே...., ஓட்டுக்கு உதட்டில் உறவாடடா தாண்டவக்கோனே!

3 கருத்துகள்:

சுபாஷ் சொன்னது…

ஏது ஜம்புவா? அது பழைய ஜெய்சங்கர் படம்ல. அய்யா கபாலி கலைஞரின் கடிதத்தை படிச்சி படிச்சி எனக்கு கண்ணீரு ஆறா ஓடுதய்யா. இவ்ளோ கஷ்டப்படுற கலைஞர் நிச்சயமா இந்த எலக்சனுல ஓய்வு எடுக்க வேண்டி நம்ம ஓட்டு இலைக்குத்தான்.

பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பெயரில்லா சொன்னது…

kalaingar solvathellam unmai