செவ்வாய், 26 மே, 2009

ஏன் இவ்வளவு மர்மங்கள் மரணத்தில்?

விடுதலைப் புலிகளிகளின் தலைவர் பிரபாகரன் முள்ளிவாய்க்காலில் நடந்த க‌டும் போரின் போது இலங்கை ராணுவத்தால் சுட்டுக்கொல்லப் பட்டதாக இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும், பாதுகாப்புக் காரணங்களுக்காக அவரை மறைத்து வைத்திருப்பதாகவும், தக்க சமயத்தில் மக்கள் முன் தோன்றுவார் என்று முன்பு அறிவித்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன், இப்போது பிரபாகரன் வீர மரணம் அடைந்து விட்டார் என்று கூறியிருக்கிறார். 

வன்னியில் நடந்த இறுதிப் போரில்,பிரபாகரன் ஆம்புலன்ஸ் வேனில் தப்பிச் செல்ல முயன்றபோது சுட்டுக்கொல்லப் பட்டதாக‌ முதலில் ராணுவம் தெரிவித்தது. பின்னர் அதிலிருந்து அந்தர்பல்டிய‌டித்து இல்லை இல்லை நந்திக் கடல் பகுதியில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. பிரபாகரனின் உடல் என ராணுவத்தால் அடையாளம் காட்டப்பட்ட உடல் குறித்து பெரும் சர்ச்சை நிலவி வருகிறது.அது குறித்த தன்னுடைய அதீத கற்பனையையும்,ஏசி அறையில் டிஸ்கசன் செய்த செய்திகளையும் வெளியிட்டு அந்த நேரத்தில் தன் விற்பனையை மிக பிரம்மாண்டமாக உயர்த்திக் கொண்டது நக்கீரன் வார இதழ். 

பிரபாகரன் கொல்லப்பட்டதாக செய்தி வெளியானவுடன், அதை மறுத்து அறிக்கை முதலில் வெளியிட்டவர் மேற்குறிப்பிட்ட பத்மநாதன். விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்தும் மிக உறுதியாக‌ அதை மறுத்து பிரபாகரன் உயிருடன் இருப்பதாக செய்தி வெளியானது. மேலும், அந்த அமைப்பின் சர்வதேச உளவுப் பிரிவின் தலைவரான அறிவழகன் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட அறிக்கையில்,விடுதலைப்புலிகளின் தேசியத் தலைவர் உயிருடன் இருக்கிறார் என்றும் தேவைப்படும்போது மக்களுடன் தொடர்பு கொள்வார் என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் திடீரென‌ செல்வராசா பத்மநாதன் பிரபாகரன் வீர மரணம் அடைந்து விட்டதாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் வெளியிட்ட‌ அறிக்கை:

தமிழீழ மக்களின் விடுதலைக்காகவும், செழுமையான எதிர்காலத்திற்காகவும் தனது வாழ்நாளை அர்ப்பணித்து போராடிய தமிழீழ தேசியத் தலைவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரும் தலைமைத் தளபதியுமாகிய மேதகு வே.பிரபாகரன் அவர்கள் சிங்கள ஆதிக்கப்படைகளுடனான போரில் வீரச்சாவினை தழுவியுள்ளார் என்பதை அனைத்துதமிழீழ மக்களுக்கும், தமிழக மக்களுக்கும், புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் தாங்கொண்ணா துயருடன் அறியத் தருகின்றோம். கடந்த 37 வருடங்களாக தமிழீழ மண்ணில் பொங்கிப் பிரவாகித்த விடுதலை வரலாற்றின் ஆன்மாகவும் குறியீடாகவும் விளங்கியவர் எமது தேசியத்தலைவர். 

ஒரு கால் நூற்றாண்டுக்கு மேலாக அடக்குமுறைக்கு முகம் கொடுத்து நின்ற ஒரு தேசிய இனத்தின் வரலாற்றையே மாற்றுகின்ற விருப்போடும் துணிவோடும் நம்பிக்கையோடும் எதிரிக்கெதிரான விட்டுக் கொடுப்பற்ற ஒரு பெரும் விடுதலைப் போரை தலைமையேற்று நடத்தியவர் அவர். கற்பனைக்கு எட்டாத தற்தியாகமும், கட்டுப்பாடும், வீரமும், ஒழுக்கமும் நிறைந்த, உன்னதமான ஒரு விடுதலை இயக்கத்தைக் கட்டியெழுப்பி, பெரும் படையணிகளோடும் ஒரு தனித்த தேசத்திற்குரிய நிர்வாகக் கட்டமைப்புகளோடும் கனரக ஆயுத வல்லமைகளோடும் போராட்டத்தை வழிநடத்தினார். அரசியற் போராட்டத்திற்கு இணையாக சமூக மாற்றத்திற்கான போராட்டங்களையும் முன்னெடுத்தார். 

போராட்டக் களங்களில் எமது மகளிர் நிகழ்த்திக் காட்டிய சாதனைகளுக்கு களம் அமைத்துக் கொடுத்ததன் மூலம் எமது சமூகத்தில் பெண்களுக்கிருந்த தனித்துவமான பங்களிப்பை வெளிக்காட்டியவர் அவர். புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் மீதும், தமிழக மக்கள மீதும், உலகம் முழுவதும் பரந்து வாழும் உறவுகள் மீதும் அவர் கொண்டிருந்த பற்று மிகவும் ஆழமானது. தமிழர் போராட்ட வரலாறு நெருக்கடிகளை எதிர்நோக்கி, மீளமுடியாத கட்டத்தை எதிர்கொண்ட காலங்களில் அவற்றையெல்லாம் துணிச்சலோடு எதிர்கொண்டு விடுதலையை அடுத்த கட்டத்திற்கு வேகமாக நகர்த்தியவர் எமது தேசியத் தலைவர். தலைவரின் போராட்ட அனுபவமும், தற்துணிவும், வீரமுமே எவ்வித நெருக்கடிகளையும் எதிர்கொள்ளும் உந்து சக்தியாக, எமது போராட்ட சக்கரத்தின் அச்சாணியாக இருந்திருக்கிறது. 

அமைதிப் பேச்சுவார்த்தைகள் முறிந்து, சர்வதேச சக்திகளின் துணையுடன் ஒரு பெரும் யுத்தம் மீண்டும் எம்மீது திணிக்கப்பட்ட போது, தலைவர் அவர்கள் அதனைத்துணிவுடனேயே எதிர்கொண்டார். போர் நெருக்கடியான கட்டங்களை எட்டி எமது நிலப்பரப்புகள் எதிரியால் சுற்றி வளைக்கப்பட்டு ஒரு பெரும் யுத்தம் எம்மக்கள் மீது ஏவிவிடப்பட்டபோதும் தலைவர், தான் வாழ்ந்த மக்களுடனேயே நின்றார். மக்களதும் தளபதிகளினதும் தொடர்ச்சியான வேண்டுகோள்களையும் மீறி அவலப்படும் மக்களை விட்டு வெளியேற மறுத்தார். எமது மக்கள் எதிர்கொண்ட அத்தனை வலிகளையும் தானும் சுமந்தார். இறுதியில், விடுதலைக்கான இந்த நீண்ட பாதையில், எந்த மக்களுக்காக ஆயுதமேந்தினாரோ அம்மக்களுடனேயே கடைசி மணித்துளிவரை நின்று போராடி வீரச் சாவடைந்தார். 

வரலாற்றின் ஓர் உண்மை மனிதனாக, ஒரு விடுதலைப் போரொளியாக, அடிமைப்பட்டுப்போன ஓர் இனத்தின் மீட்பராக, ஓரு சமூகத்தின் அரசியல் வழிகாட்டியாக, விடுதலையின் ஒரு குறியீடாக, தமிழினச் சின்னமாக, உலகத் தமிழ் இனத்தின் ஒரு வரலாற்று நாயகனாக வாழ்ந்த எங்கள் தேசியத் தலைவர் மறைந்து விடவில்லை. தமிழீழ தேசத்தின் தலைமைச் சுடராக எம் தேசமெங்கும் அவர் ஒளிவீசிக் கொண்டிருக்கின்றார். மானிடத்தின் விடுதலையை நேசிககும் எல்லோர் மனங்களிலும் அவர் என்றும் நிறைந்திருக்கின்றார். அழிவென்பதே அற்ற ஒரு தத்துவார்த்த ஒளியாக அவர் எங்கும் நிறைந்திருக்கின்றார். 

உலகெங்கும் விடுதலையை அவாவி நிற்கும் இனங்களுக்கு தலைவரின் வாழ்க்கை ஒரு வழிகாட்டி. எம் மக்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுங்கள் என்பதே அவர் எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கும் விடுதலைப் பத்திரம். இதனையே எங்கள் மனங்களில் ஏந்துவோம். தலைவர் ஏற்றிய விடுதலை நெருப்பை அதன் இறுதி இலக்குவரை அணையாது பாதுகாப்போம். எமது தேசியத் தலைவரினது வீரவணக்க நிகழ்வை அதற்குரிய எழுச்சியுடன் மேற்கொள்ளுமாறு அனைவரையும் வேண்டுகிறோம். திங்கட்கிழமை 25.05.2009 முதல் ஒரு வாரத்திற்கு எமது தலைவரை நினைவு கொள்ளும் வீரவணக்க வாரமாக எமது இயக்கம் பிரகடனப்படுத்துகிறது. 

தலைவரது லட்சிய நெருப்பை எம் மனங்களில் ஏந்தி அவர் கடைசிவரை போராடிய எமது மக்களின் விடுதலையை வென்றெடுக்க உழைப்பதே அவருக்கான உண்மையான மரியாதையாகும். எமது தலைவரின் வீரச்சாவையிட்டு தம்மையோ ஏனையோரையோ வருத்திக் கொள்ளும் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டாமென அனைத்து தமிழ் மக்களையும் பணிவன்புடன் வேண்டிக் கொள்கிறோம். எமது தேசியத் தலைவரோடு வீரச்சாவைத் தழுவிய அனைத்து தளபதிகளுக்கும் மாவீரர்களுக்கும் மக்களுக்கும் எமது வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம். இம் மாவீரர்கள் பற்றிய விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். செல்வராசா பத்மநாதனின் இந்த புதிய அறிக்கை உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் பரபரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

புலிகளின் தேசியத்தலைவர்  பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என ஏற்கனவே வெளியாகியிருந்த தகவலால் நிம்மதியடைந்திருந்த புலம்பெயர் தமிழ்மக்கள் இந்த துயரச்செய்தி கேட்டு மிகவும் சோர்வுடனும் கவலையுடனும் காணப்படுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. 

அதேபோல தேர்தல் நேரத்தில் எகிறிகுதித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டின் உலகத் தமிழின த்தலைவர்கள் யாரையுமே இப்போது காணவில்லை.  ஒருவேளை கோடை காரணமாக தங்கள் பணிகளுக்கு விடுமுறையளித்து விட்டு சுற்றுலாத் தளங்களுக்குச் சென்றுவிட்டார்களா? யாருக்காவது தகவல் தெரிந்தால் சொல்லுங்கள். முக்கியமாக அண்ணன் திருமாவை சுத்தமாகக் காணவில்லை, ஒருவேளை காங்கிரஸின் கால்களைச் சுத்தி சுத்தி வருகிறாரோ?

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

வாழ்த்துகள்!

உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.

உங்கள் வருகைக்கு நன்றி,

நன்றி
தமிழ்ர்ஸ்

பெயரில்லா சொன்னது…

Because,Merchants of Tamil Eelam (including Vaiko) are not ready to loose their income in the name of Prabakaran.