செவ்வாய், 17 மார்ச், 2009

கிணற்றில் குதித்த ராதா

மறக்கமுடியுமா? ஜனவரி 12 1967. ஆம் அன்று தான் புரட்சித்தலைவர் எம்ஜியாரை   புரட்சி நடிகர் எம்.ஆர் ராதா சுட்டுக்கொல்ல முயற்சித்த நாள். அதற்கு காரணம் என்ன என‌ பலரும் பல கதைகளை அவிழ்த்துவிட்டனர். அதிலே ஒன்று தான் இது  கலைஞரின் சூழ்ச்சி என்றும் பரவிய ஒரு செய்தி. அதற்குப் பிறகு எம்.ஆர். ராதாவின் குடும்பமென்றாலே எம்ஜியாருக்கு ஆகாது என்ற நிலையில் எம்.ஆர் ராதாவின்  வம்சாவழிமக்கள் கலைஞரை ஆதரிக்க ஆரம்பித்தனர். காலங்காலமாய் தொடர்ந்து வந்த ஆதரவு ஒரு கட்டத்தில் ராதாரவியின் எதிர்ப்பு மூலம் வெடித்தது.மனக்கஷ்டத்திலும் பணக்கஷ்டத்திலும் உழன்ற ராதாரவியை துளியும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார் கலைஞர்.

தன்னை நம்பியவர்கள் மந்திரி குமாரி படத்தில் வரும் "வாராய் நீ வாராய்" போல அழைத்துச்சென்று தள்ளி விடக்கூடியவர் கலைஞர் என்பதை காலம் கடந்து உணர்ந்த ராதாரவி தன் பால்ய நண்பர் காமெடி நடிகர் SS.சந்திரனுடன் வெளியே வந்து அதிமுகவில் அடைக்கலமானார். பழைய படங்களில் ஒவ்வொரு சீனிலும் கலைஞரின் கொள்கைப்பரப்பு செயலாளராகவே மாறியிருந்த SS.சந்திரனும் வேலி தாண்டி எஸ்கேப் ஆகியது கலைஞருக்கு ஒரு இழப்பாகத்தான் இருந்தது.. அம்மாவின் அரவணைப்பில் அடைக்கலம் புகுந்தவர்களுக்கு கடும் வரவேற்பு. பட்டாடைகள்,பதவிகள் என கலைஞ‌ரிடம் காணாத மகிழ்சி வெள்ளம் அவர்களை மூழ்கடித்தது எனலாம்.

ஜெயாவை படு கேவலமாக பொது மேடைகளில் விமர்சித்து வந்த “தீப்பொறி ஆறுமுகம் தன் மகனுக்கு ஒரு வேலை விசயமாக கலைஞரை சந்திக்க, அதற்கு கலைஞர் "யோவ் உன் மகனுக்கு ஏய்யா வேற வேல, பேசாம அவனயும் உன்ன மாதிரி மேடயேறி கத்தச்சொல்லு" என காமெடியாக கலைஞர் சொல்ல அது டிராஜடியாக மாறிவிட்டது.அவரும் அம்மா பக்கம் பாய்ந்து விட அங்கே அவருக்கும் ராஜமரியாதை. ஒரு கூட்டம் பேச வெறும் 500 ரூபாய் கூலி என ஓடிக்கொண்டிருந்த தீப்பொறி ஆறுமுகத்திற்கு அம்மாவிடம் தனி கார்,மாதம் 5000 ரூபாய் சம்பளம் என ஸ்பெசல் கவனிப்பு. இந்த இணைப்பில் கூட ராதாரவியின் பங்கு முக்கியமானது என்று அன்றைய அரசியல் விமர்சகர்கள் கூறினர். 

கலைஞர் ஒரு நரி என்றும், அம்மா தான் தெய்வம்,லெட்சுமி என்றும் மேடைகளில் பேசி வந்த ராதா சைதைக்கு MLA வாகவும் பதவி வகித்தார். இந்த நிலையில் காரணம் ஏனென்று தெரியவில்லை அங்கேயும் உள்ளுக்குள் புகைய ஆரம்பித்தது. தற்போது அது பிடித்து எரிந்து ராதா மீண்டும் தாய்கழகத்தில் இணைய இருக்கிறார். விரைவில் சந்திரனும் சூரியனிடம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.  விளக்கைப் பிடித்துக் கொண்டே கிணற்றில் விழுந்தான் என கிராமங்களில் சொல்வார்கள்.அந்த மாதிரி ராதா மீண்டும் திமுகவில் இணைந்தது இந்த பழமொழிக்கு உதாரண‌மாகத் திகழ்கிறது எனலாம்