ஞாயிறு, 29 மார்ச், 2009

கரை சேறுமா வணங்கா மண்? – C.I.D சிங்காரம்

மரணம்‍-மரணபயம் இரண்டுமே இப்போது சாதாரணம். குழந்தைகள்  முதல் பெரியவர்  வரை அடுத்து யார் வீழப்போகிறார்கள் என்பது தெரியாமல் துணிச்சலாக சாவை வரவேற்கத் தயாராகிவிட்ட வன்னி மக்கள். இரவிலே தூங்கப்போகும் முன் தங்களின் மண்ணையும்,எஞ்சியிருக்கும் சொந்தங்களையும்,அருகே இருக்கும் மக்களையும் நம்பிக்கையில்லாமல் ஒரு முறைப் பார்த்து விட்டு தூங்கச்செல்கிறார்கள். அந்த வன்னிக் கள‌த்தில் பஞ்சுமெத்தைகளோ, பருத்திப் போர்வைகளோ கிடையாது. மழைத்தாள் கொண்டு வேயப்பட்ட கூரைகள் என்னேரேமும் சிரிலங்கா ரானுவத்தின் எரிகணைகளை வரவேற்று காத்திருக்கின்றன.

 அவர்களது இரவுத்தூக்கம் அவர்கள் காலையில் இருப்பார்களா என்பதை அறியாது அவர்களைத் தழுவுகிறது கூடவே சில நேரங்களில் மரணமும்.மரணத்தை எதிர்க்கத் துணிந்துவிட்டார்கள் வன்னி மக்கள். ஆனால் அந்த மரணம் அமைதியாய் நிகழ்ந்தால் கூட‌ பராவாயில்லை.சீரி வரும் எரிகணைகள் புலிகள் யார்,பெண்கள் யார்,குழந்தைகள் முதியவர்கள் யார் என்ற பேதமின்றி அனைவரையும் சமமாக ந‌டத்தி யாரையும் பேதமில்லாமல் சிதைத்து சின்னாபின்னமாக்கி விடுகிறது..

ஐநாவுடன் சேர்ந்து ஒருபுறம் குரல்கொடுக்கிறது அமெரிக்கா, ஆனால் மறுபுறம் அந்த மக்களின் குரல்வளையை நெறிக்க இலங்கைக்கு ஆயுதம் கொடுக்கிறது. அமெரிக்காவின் நவீன ஆயுதங்கள் வாங்கப்பட்ட பின்னர் தான் இலங்கைப் படைக்கு இவ்வளவு முன்னேற்றம்.இலங்கைப் பொருட்களை புறக்கணிப்போம், இந்தியத் தொலைக்காட்சிகளைப் புறக்கணிப்போம் என பக்கம் பக்கமாக எழுதியும் குரல்கொடுத்தும் வரும் புலம்பெயர் ஈழமக்கள் ஏன் அமெரிக்க பொருட்களைப் புறக்கணிக்க முன்வருவதில்லை? கேட்டால் அவன் வெறும் ஆயுதம் தானே விற்கிறான் என்பார்கள்.ஆனால் அமெரிக்காவில் தயாரிக்கப் படும் ஒவ்வொரு தோட்டாக்களும் ஈழத்தமிழனின் பெயர் தாங்கி வருவது தெரியாதா? அல்லது அமெரிக்க குளிர்பாணங்களும்,மது பாணங்களும் பழகிவிட்டதால் அதைக்கைவிட மணமில்லாயா?

 “உலகமே கைவிட்ட பின் உறவுகளை நோக்கி ஒரு பயணம் என்ற தலைப்பில் “வணங்காமண் என்று ஒரு கப்பல் உணவு,மருந்துப் பொருட்களுடன் ஈழம் நோக்கி தன் பயணத்தை விரைவில் தொடர இருக்கிறது. ஆனால் இந்த கப்பல் சந்திக்கப்போகும் எதிர்ப்புகள்,பிரச்சிணைகள் எத்தனை எத்தனையோ தெரியாது. இந்த கப்பலை முடக்க இலங்கையரசு என்னவேண்டுமானாலும் செய்யும். அதை விடக் கொடுமை, இந்த அறிவிப்பு வந்தவுடன் எரிகிற வீட்டில் பிடுங்கும் குணமுடைய அதே ஈழ மண்ணில் பிறந்த ஈணப்பிறவிகள் சிலர் போலி முகவரி, போலி தொலைபேசி எண்களை வைத்துக் கொண்டு வசூல் வேட்டையில் இறங்கியிருக்கிறார்கள். நீங்கள் உங்கள் சொந்தங்களுக்கு ஏதேனும் செய்ய விரும்பினால் சரியான சேவையரிடம் உங்கள் உதவிகளைக் கொண்டு சேருங்கள்.

தூங்கி எழுந்த எடம் சுடுகாடா ஆச்சிதுங்க,ஏரு கட்டி உழுத இடம் மண்மேடா போச்சுதுங்க. நிக்காத மழையில தான் நின்னுகிட்டே தூங்குறோங்க‌.பள்ளிக்கூட புள்ளையெல்லாம் பதுங்கு குழியில,இங்க வயசுப்புள்ள தணியாக ஒதுங்கமுடியல. இது பாடல் வரிகள் அல்ல,உயிரின் வலிகள்..

-C.I.D  சிங்காரம்

 அறிவிப்பு : ஞாயிறு அதிரடி இனி திங்கள் கிழமைகளில் வெளியாகும்.

நாளை ஞாயிறு அதிரடி:"உதயசூரியன் சின்னத்திலே" கலைஞர் காமெடி கடிதம்

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

உண்மையான பார்வை. எங்கள் இழப்புக்கு ஈழம் தவிர வேறு எதுவும் ஈடாகமாட்டாது.
பாதிக் கிணறு தாண்டிவிட்டோம். மீதி தாண்ட உதவுங்கள்.