வியாழன், 2 ஏப்ரல், 2009

நினைவுகள் :துள்ளாத மணமும் துள்ளும்

மும்பை ரயில் நிலையத்திலிருந்து துவங்குகிறது கதை.ரயில் பயணமாக கதையும் பயணமாகிறது.பாடகராகும் லட்சியத்துடன் கிராமத்திலிருந்து வந்து சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் கேபிள் டிவி நிலையத்தில் வேலை செய்பவராக குட்டி(விஜய்).அவருக்கு நண்பர்களாக தாமு,பாலாஜி,வையாபுரி.அவர்களுக்கு முதலாளியாக மணிவண்ணன்.  தினமும் இரவு தெருக்கச்சேரி நடத்தும் விஜய் அந்த ஏரியாவின் சிறந்த சிங்கர்.அந்த பகுதிக்கு தன்பாட்டியுடன் குடியேறும் ருக்கு (சிம்ரன்). குட்டியின் குரல் தன் தந்தையின் குரலை ஒத்திருப்பதை அறிந்து குட்டியைத்தேட ஆரம்பிக்கிறார் ருக்கு.அந்த தேடுதலில் பல அசம்பாவிதங்கள்,சில்மிசங்களில் குட்டி ஒரு பொருக்கியாக ருக்குவிற்கு அறிமுகமாகிறார்.யார் யாரோ செய்யும் விவகாரங்களுக்கு ருக்குவின் கண்முன்னே குட்டிதான் வந்து நிற்கிறார்.ஒரு தடவை தன் பணத்தை திருடிய ஒருவனை துரத்திக்கொண்டு வர அவன் நேராக  ருக்கு படிக்கும் கல்லூரி கெமிக்கல் லேபுக்குள் நுழைந்து ஓட துரத்தி வரும் குட்டி சரியாக ருக்கு அருகில் வந்து நிற்க அந்த் நேரம் அருகே இருக்கும் ஆசிட் பாட்டில் கீழேவிழுந்து உடைந்து ருக்குவின் கண் பறிபோய்விடுகிறது. 

தன்னால் தான் ருக்குவின் கண்கள் பறிபோனதை நினைத்து வருந்தும் குட்டி ருக்குவிற்கு சின்னச்சின்ன உதவிகள் செய்ய ஆரம்பிக்கிறார்.கொஞ்சம் கொஞ்சமாக இருவருக்கும் நெருக்கம் உண்டாகி அங்கே ஒரு மெல்லிய காதல் துளிர் விட ஆரம்பிக்கிறது. இந்த நேரம் குட்டியின் அம்மா இறந்துவிட அவரது கண்கள் ருக்குவிற்கு பொருத்த ஏற்பாடு நடக்கிறது. அந்த ஆபரேசனுக்காக தன் கிட்னியை மும்பையில் உள்ள சர்தார்ஜி ஒருவருக்கு கொடுப்பதற்காக மும்பை செல்கிறார் குட்டி.ஆபரேசன் முடிந்து ஊருக்குத் திரும்புவதற்காக மும்பை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருக்கும் போது அருகே இருந்த வெடிகுண்டு பெட்டியால் மும்பை போலீஸ் அவரைக் கைது செய்து சிறையிலடைக்கிறது.7 வருட சிறைவாசம் முடிந்து ரயிலில் திரும்பும் குட்டி,தான் வாழ்ந்த ஏரியாவே மாறி புதிய இடமாக மாறியிருப்பதைக் கண்டு அதிர்கிறார்.கடைசியாக ருக்குவைக் கண்டுபிடித்து எப்படி வாழ்க்கையில் இணைகிறார் என்பது தான் கிளைமேக்ஸ். 

எழில்: இது ஒரு  உயிரோட்டமுள்ள  காதல் காவியம். மிக நேர்த்தியான கதை,எளிமையான‌ கதைக்களம்,அனைவருக்கும் புரியும் திரைக்கதை,கதையுடன் கூடிய காமெடி மிக மிக அருமை. இந்தப் படத்தை எழுதி இயக்கிய எழில் அதற்குப் பிறகு இது போன்ற படம் கொடுக்கவே இல்லை.

விஜய்: ஏனோ தானோ என்று குழம்பி ரசிகர்களையும் குழப்பி குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கமுடியாத பரங்கிமலை ஜோதியில் (இப்போது அல்ல) ஓடும் படங்களுக்குப் போட்டியாக நடித்துவந்த விஜய்,முதன்முதலாக தனக்கும் நடிப்பு வரும் என (இந்த படத்தில் மட்டும்) நிறுபித்த படம் தான் துள்ளாத மணமும் துள்ளும். விஜய் அறிமுகமாகிற காட்சியே அமர்க்களம்.அந்த அளவிற்கு சிறப்பாக மிக அடக்கமாக பன்ச்சி டைலாக்குகள் இன்றி "அதிரும்" "ஒதரும்" என கையக் கால ஆட்டிக்காட்டாமல் அருமையாக நடித்திருந்தார்.. 

சிம்ரன்: படத்தின் வெற்றிக்கு பெரிய‌ பலம் சிமரன்.கண்தெரியாதவராக இருந்து கலெக்டராக மாறும் ஒரு நல்ல பாத்திரம்.மற்ற பட‌ங்களில் கவர்ச்சியை அள்ளித் தெளித்த சிம்ரன் இந்த படத்தில் கண்ணை மட்டுமல்லாது உடலையும் மூடிக்கொண்டு மிகச்சிறப்பான நடித்தார்.சிம்ரனின் நடிப்புக்கு அவரது பிண்ணனிக் குரல் மிக வலு சேர்த்தது.தமிழ்திரையுலகில் சிம்ரன்,ஜோதிகா என எல்லாக் கதா நாயகிகளுக்கும் குரல் கொடுக்கும் சவீதாவையே அந்தப் பெருமை சேரும்.சவீதா இல்லயேல் தமிழுக்கு சிம்ரனும் இல்லை,ஜோதிகாவும் இல்லை. 

காமெடி: மணிவண்ணன்,தாமு,வையாபுரி,பாலாஜி,பாரிவெங்கட் என ஒரு பட்டாளமே நடித்திருந்தது,அதிலும் டவுசர் பாண்டியாக வந்து கலக்கிய பாரி வெங்கட் மிகப்பிரபலம் ஆனார். அதே பிரபலத்தோடு அவரின் வாழ்க்கையின் முடிந்து போனது தான் பெரும் சோகம்.கல்யாண்குமாராக இருந்து கல்யாணியாக மாறுபவராக வையாபுரி.எங்கு சென்றாலும் மணிவண்ணனின் 46 ரூபாய் குவாட்டர் காமெடிகள் சிரிக்க வைக்கும். 

இசை: படத்தின் மிகப்பெரிய பலமே இசை வசந்தம் S.A ராஜ்குமாரின் இசை தான்.இதன் 5 பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட். இந்த படத்தின் ஆடியோ கேசட் கிட்டத்தட்ட 3 லட்சத்திற்கும் அதிகமாகவே விற்பனையாகியது.அந்த நேரத்தில் டீக்கடை,ஹோட்டல்களிலும் மற்றும்  பேருந்துகள் என இந்தப் படத்தின் பாடல்கள் ஒலிக்காத இடமே இல்லை. இன்னிசை பாடிவரும்,இருபது கோடி,துட்டு என அனைத்து பாடல்களும் இன்றைக்கும் ரீங்காரமிடும். 

பிளஸ்: கதையோடு இழையோடும் காமெடிகள்,மிகச்சிறப்பான திரைக்கதை,சூப்பர் ஹிட்டான பாடல்கள்,விஜய்யின் அம்மா யார் என்று ஒரு போட்டோவைக் கூடக் கடசிவரைக் காட்டாத  (செலவை மிச்சம் பண்ணிய) இயக்குனரின் திறமைசிம்ரனின் நடிப்பு, நடன‌ம். 

மைனஸ்: பிள்ளையார் படத்தோடு விஜய் பேசும் காட்சிகள் மிகமிகக் கொடுமை,அம்மா இறந்தவுடன் கழிவறைக்குச் சென்று விஜய் குமுறிக் குமுறி அழுவார், -ஆனால் அரங்கம் குலுங்கிக் குலுங்கி சிரிக்கும். 

மதிப்பெண்கள்

கதை தி.கதை------- 75/100

காமெடி------------- 50/100

விஜய்-------------- 65/100

சிம்ரன்-------------- 70/100

இசை--------------- 80/100 

மொத்தத்தில் துள்ளாத மணமும் துள்ளும்-அள்ளாத மனதையும் அள்ளியது. அதாவது அஜீத் ரசிகர்களும் ரசித்துப் பார்த்தார்கள்..

-ராயப்பேட்டை ராமு

அடுத்து வருவது: C.I.D சிங்காரம் தரும் அதிர்ச்சி ரிப்போர்ட் "மனித இரத்தம் குடிக்கும் மலேசியா"

1 கருத்து:

சந்தோஷ் = Santhosh சொன்னது…

என்னாது காந்தி செத்துட்டாரா? :))