வியாழன், 16 ஏப்ரல், 2009

நினைவுகள் : புது வசந்தம்-ராயப்பேட்டை ராமு

சூப்பகுட் பிலிம்ஸ் தயாரிப்பில் விக்ரமனின் இயக்கத்தில் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் புதுவசந்தம். முரளி,ஆனந்த்பாபு,ராஜா,சார்லி ஆகிய நால்வரும் ஹீரோக்களாக‌ இந்த படத்தில் நடித்திருந்தார்கள். 

சென்னைக்கு வேலை தேடி வந்திணையும் 4 நண்பர்கள் தெருக்களில் பாடி அதன்மூலம் வரும் வருமானத்தைக் கொண்டு கணவுகளோடு வாழ்க்கையைத் தேடுபவர்கள். இவர்களோடு வழிமாறி வந்து சேர்கிறார் கௌரி (சித்தாரா). முதலில் தன் மீது பரிதாபம் வருவதற்காக ஊமையாக நடித்து அவர்களிடையே நல்ல நட்பைச் சம்பாதிக்கிறார். இந்த நிலையில் அவர் ஊமையில்லை என்பதும் அவர் தேடிவந்த பணக்கார காதலன் சுரேஷ் வெளி நாடு சென்று விட்டதாகவும் அந்த நண்பர்களுக்குத் தெரியவர சுரேஷினைத் தேடும் படலம் ஆரம்பமாகிறது. இறுதியில் சுரேஷிடம் கௌரியை ஒப்படைக்க வழக்கமாக எல்லாப் படத்திலும் வருவது போன்ற சந்தேகம் வந்து நண்பர்கள் பிரிகிறார்கள். 

ஒரு சமயத்தில் இந்த தெருப்பாடகர்களுக்கு ஒரு நல்ல மேடையில் பாடுவதற்கு வாய்ப்பு கிடைக்க‌  அவர்கள், இதற்காக கஷ்டப்பட்ட கௌரி வந்தால் தான் நான் பாட ஆரம்பிப்பேன் என்று சொல்ல கடைசியாக கௌரியும் வந்து கலந்துகொண்டு பாடத் துவங்குகிறார். இந்த நிலையில் 4 நண்பர்களும் கௌரியைக் காதலிக்க கடைசியில் கௌரியோடு யார் சேர்ந்தார்கள் என்பது தான் கிளைமேக்ஸ். 

மோகன் வீசிய மைக்கை பாய்ந்து பிடித்துக்கொண்ட முரளி இந்த படத்தில் தான் மீண்டும் மைக் கலாச்சாரத்தை துவக்கி வைத்தார். அவர் முகத்தில் இளையோடும் சோகம் அவர் நடித்த அனைத்துப் படங்களுக்கும்  பயன்பட்டது. அவர் முகத்தைப் பார்த்துக்கொண்டே கதை யெழுதுவார்கள் போல. சிறந்த டான்சரான ஆனந்த்பாபுவும் இதில் பாடலோடு ஆடவும் செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருந்தார்.  நகைச்சுவைக்கு சார்லி. அன்று அவர் சாதாரணமாகப் பேசிய வசணமெல்லாம் சிரிப்பை வரவழைத்தன. நாலாவது ஹீரோவாக ராஜா. இந்தப்படத்தில் ஏன் நடித்தார் என்பது தெரியவில்லை.அவர்நடித்தாரா அல்லது கூடவே ஒட்டிக்கொண்டு வந்தாரா?  ஒருவேளை  ஒரு கை கொறையுதேன்னு அவரைப் போட்டிருப்பார்கள் என நினைக்கிறேன். 

சித்தாரா! ஆஹா இந்தப் பெயரைக்கேட்டு அன்றைக்கு இனிக்காத வாயே இல்லை.அன்றைய கால டீக்கடைகளில் பழைய தினத்தந்தியில் வரும் சினிமா விளம்பரங்களை வெட்டி சுவர்களில்  ஒட்டியிருப்பார்கள். அந்த வகையில் இன்றைய திரிஷாவுக்கு போட்டியாக அன்றைக்கு அதிக வால்பேப்பர் ஒட்டப்பட்ட நடிகை என்ற பெருமை சித்தாராவைச்சேரும். எப்படி அந்தக் காலத்தில் நதியாவுக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் சிறகடித்ததோ அதே போல அன்றைய சித்தாராவுக்கும் பைத்தியம் பிடித்து ஒரு கூட்டம் அலைந்தது. அந்த தெற்றுப்பல் சிரிப்பில் மயங்கிய பெரிசுகள் அன்றே தினத்தந்திக்காக டீக்கடைகளில் அதிகாலையிலேயே வெயிட் பண்ணுவார்கள். பேப்பர் வந்ததும் முதலில் சினிமா விளம்பரப்பகுதியில் உள்ள நடிகைகளின் படங்களைத் தான் தேடுவார்கள்.  காட்சி மீடியாக்களின் ஆதிக்கம் அதிகம் இல்லாத அந்த நேரத்தில் கிராம மக்களின் நண்பன் தினத்தந்தியும் ஆல் இந்திய ரேடியோவும் 5வது அலைவரிசையும் தான். 

அடுத்து விக்ரமன். இது தான் விக்ரமனின் முதல் படம்.முதல் படத்தையே வெற்றிப்படமாக கொடுத்து மக்களின் நாடியைப் பிடித்து தெரிந்து கொண்ட விக்ரமன் தொடர்ந்து இது போன்ற நல்ல படங்களைக் கொடுக்க ஆரம்பித்தார். பூவே உன‌க்காக , வானத்தைப் போல, சூரிய வம்சம்,உன்னை நினைத்து என சூப்பர்ஹிட் படங்களை சூப்பர்குட்டோடு இணைந்து கொடுத்தார். முதன்முதலில் நான்கு ஹீரோக்கள் நடித்த படத்தை இயக்கி சிங்கிள் ஹீரோ சப்ஜெக்ட்டுக்கு ஆப்படித்த பெருமை விக்ரமனையே சாரும்.இவர் போட்ட அந்த 4 ஹீரோ சாலையில் பயணித்து அதிக பலன் கண்டவர் யாரென்றால் அது குடும்ப இயக்குணர் வி.சேகரைத் தான் சொல்லவேண்டும். டயலாக் முடிந்தவுடன் பின்பக்கம் ஹம்மிங் கொடுத்தல்,ஒரே பாடலில் கோடிஸ்வரனாவது, சம்பந்தமே இல்லாமல் ரயில்வே ஸ்டேசன்,மரத்தடி,குளக்கரையில் நின்று கொண்டு முக்கால் மணிநேரம் பேசிக்கொண்டிருப்பது, வெறுப்பு வரும் டைமிங் காமெடிகள் போன்ற அட்டு பார்முலாக்களை தமிழ்சினிமாவுக்கு பெற்றுக்கொடுத்த பெருமை விக்ரமனையே சாரும். 

இசை: இசைவசந்தம் எஸ்.ஏ ராஜ்குமார். என்னவோ தெரியவில்லை. இவர் இசையமைத்தால் அனைத்து பாடல்களுமே ஹிட்டாகி விடுகின்றன.ஆனால் இவர் மட்டும் இன்னமும் மூன்றாந்தர இசையமைப்பாளராகவே இருக்கிறார். இந்தப் படத்தில் அனைத்து பாடல்களுமே வழக்கம் போல சூப்பர் ஹிட் தான்.

1) இது முதன்முதலா வரும் பாட்டு

2) பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா

3) ஆயிரம் திருநாள் பூமியில் வரலாம்

4) கௌரிக்கு திருமணம் நிச்சயமாச்சி

5) போடு தாளம் போடு

6) வாருங்கள் வாருங்கள் வானத்து மேகங்களே என அன்றைய தினத்தில் இந்தப் பாடலகள் ஒலிக்காத இடங்களே இல்லை எனலாம். 

ஆக புது வசந்தம் விக்ரமனுக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் ஒரு புதிய விருந்தாக அமைந்தது என்பதில் சந்தேகமே இல்லை. 

மதிப்பெண்கள்: 79/100 

UPDATE TODAY: அதிசய உலகம்: "அதிர்ச்சி தந்த துபாய் பாலைவனம்"

3 கருத்துகள்:

முரளிகண்ணன் சொன்னது…

நல்ல பதிவு.

சித்தாராவின் முதல் படம் (தமிழில்) புதுப் புது அர்த்தங்கள்.

டாஸ்மாக் கபாலி சொன்னது…

// முரளிகண்ணன் கூறியது...
நல்ல பதிவு.

சித்தாராவின் முதல் படம் (தமிழில்) புதுப் புது அர்த்தங்கள்.//

தகவலுக்கு நன்றிண்ணே! மாற்றிவிட்டேன்.

SUREஷ் சொன்னது…

//இவர் இசையமைத்தால் அனைத்து பாடல்களுமே ஹிட்டாகி விடுகின்றன .ஆனால் இவர் மட்டும் இன்னமும் மூன்றாந்தர இசையமைப்பாளராகவே இருக்கிறார்//இத்தனைக்கும் சொந்த சரக்காகத்தான் தோன்றுகிறது..