திங்கள், 27 ஏப்ரல், 2009

ஞாயிறு அதிரடி: "ஆப்பு வைக்கும் அட்சய திருதியை"

கறவடைக்குறிச்சி என்ற ஊரின் வேலிகாத்த மாரியம்மன் ஆலயம் பிரபலமானது. அந்த ஆலயத்தின் பூசாரி அய்யானார் ஆதிகேசவன் ஒரு நாள் பூஜையை முடிச்சிட்டு அசதியில் அந்தக் கோயில் வளாகத்திலேயே படுத்துத் தூங்கிவிட்டார். திடீரென கோயிலுக்குள்ளேயிருந்து ஒரு சத்தம் கேட்கவே பதறியடித்து எழுந்து ஓடிச்சென்று உள்ளே பார்த்தால் அங்கே அம்மன் கையில் சூலத்தைத் தூக்கிக் கொண்டு ஆவேசமாக ஆடிக்கொண்டிருந்தாள். பயந்து போன பூசாரி விபூதியை அள்ளி அம்மன் மீது தூவ கொஞ்சம் அமைதியான அம்மன் அடேய்! பூசாரி இந்த உலகத்தில் தீமைகள் பெருகிவிட்டதடா! நான் இன்னும் சில நாட்களில் இந்த உலகத்தை அழிக்கப்போகிறேன் என்று ஆவேசமாகச் சொன்னாள். இதைக்கண்டு நடுங்கிய பூசாரி, தாயே! நீ கோபப்பட்டால் இந்த உலகம் தாங்காது. சாந்தமாகு.உன் உக்கிர முடிவுக்கு வேறு விமோசனமே இல்லையா அம்மா? என கேட்டவாறு தடாலென அம்மன் காலில் விழுந்தார். சிறிது நேரம் கோபத்திலிருந்த அம்மன் பின்னர் கோபம் தணிந்தவளாக, டேய் பூசாரி! நீ கேட்டுக்கொண்டதால் ஒரு விமோசனம் சொல்கிறேன் கேள். இங்கு நடந்த விசயத்தை நோட்டீஸாக அடித்து எல்லோருக்கும் வினியோகம் செய். அது தான் நான் உனக்குத் தரும் பரிகாரம் என்று கூறியவாறு அம்மன் அங்கிருந்து மறைந்து விட்டாள். உடனடியாக பூசாரி இந்த விசயத்தை 1000 பிரதிகள் அச்சிட்டு வினியோகம் செய்தார். 5 நாட்களில் அவருக்கு தங்கப் புதையல் கிடைத்தது. இந்த விசயத்தைக் கேள்விப்பட்டு மஞ்சக்கொள்ளை மருதப்பன் 500 பிரதிகள் அச்சிட்டு வெளியிட்டார். ரொம்ப நாளைக்கு முன் காணமல் போன அவரது மகன் திரும்பக் கிடைத்தான். இராஜவேலிபுரம் ராமசாமி 250 பிரதிகள் அச்சிட்டு வெளியிட்டார். ஒரு வாரத்தில் அவர் வாங்கிய லாட்டரி சீட்டில் 50ஆயிரம் ரூபாய் கிடைத்தது

இதை நம்பாத முத்துநகர் முத்தன்னா எனபவர் இந்த நோட்டீஸை கிழித்துப்போட்டார். உடனே அவரது மனைவி பாம்புகடித்து இறந்தாள். இந்த நோட்டீஸை வாங்கி வீட்டில் மறந்து வைத்திருந்த வாழப்பாடி வடுகநாதன் ரோட்டில் சென்று கொண்டிருக்கும் போது அவர் மீது வாழைக்காய் லாரி மோதி பலத்த காயமடைந்த அவர் உடன் நினைவு வந்து இந்த நோட்டீஸை 1000 பிரதிகள் அச்சிட்டு வெளியிட்டார். அவருக்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது. ரங்கராஜபுரம் ராமு என்ற மாணவர் இந்த நோட்டீஸைக் கிழித்துப்போட்டார். அவர் பரீட்சையில் பெயிலானார். இதைப் படிக்கும் நீங்களும் இந்த விசயத்தை அலட்சியம் செய்யாமல் அதிக பிரதிகள் அச்சிட்டு அம்மனின் அருளைப் பெருவீர்

இதுபோன்ற நோட்டீஸ்களை நீங்கள் நிச்சயம்  பார்த்திருப்பீர்கள்.சிலர் அச்சிட்டும் வெளியிட்டிருப்பீர்கள். இந்த மாதிரி நோட்டீஸ்கள் அதிகபட்சமாக சித்திரை மாதம் மற்றும் ஆடி மாதங்களில் வெளியாகும். மேற்படி விசயங்களை ஆராய்ந்து பார்த்தால் அதிலே அம்மனின் புகழ் பரப்புவதை விட நோட்டீஸின் புகழ் பரப்பும் பரப்புரை தான் அதிகமாக இடம்பிடித்திருக்கும். 

இந்த நோட்டீஸ நம்பி நாமளும் அந்த ஊரைத் தேடிப்போனமுன்னா அப்படி ஒரு ஊரும் இருக்காது, அப்படி ஒரும் கோயிலும் இருக்காது. அப்ப இந்தமாதிரி சம்பவம் நடந்ததா யாருடா கெளப்புறாய்ங்கேன்னு பாத்தம்னா நமக்கு ஒரு உண்மை புரியும். 

இது என்ன மேட்டருன்னா சித்திரை மற்றும் ஆடி மாதங்களில் கல்யாணம் புதுமணை புகுவிழா போன்ற சுபவிழாக்களை நடத்தமாட்டார்கள். இந்த சீசன்களில் சிறு பிரிண்டிங் பிரஸ் வைத்திருப்பவர்கள் கடுமையாக பாதிக்கப் படுவார்கள். கோயில் திருவிழாக்கள் போன்ற பெரிய விழாக்களுக்கு லித்தோஸ் எனப்படும் பெரிய பிரிண்டிங் பிரஸ் மூலம் மட்டும் தான் போஸ்டர் அடிப்பார்கள்.(பிளக்ஸ் பிரிண்ட் வருவதற்கு முன்

இந்த சீசன்களில் பாதிக்கப்படும் சிறு பிரிண்டிங் பிரஸ்காரர்கள் அதிகபட்சமாக கிராமங்களில் இது போன்ற டுபாகூர் மேட்டர்களை நோட்டீஸாக அச்சிட்டு வெளியிடுவார்கள். 1000 பிரதி வெளியிட்டால் எப்படியும் ஒரு 10 இளிச்சவாயனாவது மாட்டுவான் என்ற நம்பிக்கை தான்.அவர்கள் நம்பிக்கையும் பலித்து இந்த சீசனில் நல்ல பிஸினசும் இருக்கும்

இதே மாதிரி டிரெண்டில் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வந்தது தான் இந்த அட்சய திருதியை. அதாவது ஏழையாக இருந்த குசேலன் தன் வருமையைப் போக்கிக்கொள்ள வேண்டி இந்த நாளில் தான் கண்ணனைச் சந்தித்து குபேரன் ஆகிய விசயத்தை நம் தமிழக பாலஜோதிடர்கள் சமீபத்தில் தான் கண்டுபிடித்து இருக்கிறார்கள். எனவே அட்சய திருதியை அன்று ஒரு பொருள் வாங்கினால் அது மூட்டைப்பூச்சி போல பல மடங்காக பெருகும் என்றும்  குறிப்பாக இந்த நாளில் தங்கம் தான் மீண்டும் சொல்கிறோம் தங்கம் தான் வாங்கவேண்டும் என மேற்படி நோட்டீஸ் சாயலில்  ஒரு மேட்டரைக் கிளப்பி விட்டுவிட்டார்கள்

எந்த மேட்டரைச் சொன்னாலும் அதை உடனடியாக நம்பி அதை  அமுல்ப்படுத்தும் அப்பாவி தமிழக உடன்பிறப்புகள் குறிப்பாக பெண்கள் இதை தாங்கள் செய்வது மட்டுமல்லாது மற்றவர்களுக்கும் இந்தச்செய்தியை காட்டுத்தீ போல பரப்பி இன்று அது பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது. அட்சயம் என்றால் பெருகுதல் என்ற ஒரு அர்த்தத்தினை வைத்துக்கொண்டு வியாபாரிகள் இன்றைய நாளில்  லாபமடைகின்றனர்

இன்றைய நாளில் எது வாங்கினாலும் அது பெருகுமாம். அப்படியானால் ஒருவன் அட்சய் திருதியை அன்று சின்னவீடு செட்டப் பண்ணுகிறான் என்று உதாரணத்திற்கு வைத்துக் கொள்வோம். அந்த வருடம் முழுக்க அவனுக்கு சின்னவீடுகள் பெருகிக்கொண்டு வருமா (சின்ன வீடு என்பது நீங்கள் நினைக்கும் "அது" அல்ல, சின்ன இல்லம்).இன்று ஒரு குடிமகன் டாஸ்மாக் சென்று ஒரு குவாட்டர் வாங்கினால் அவனுக்கு வாழ் நாள் முழுவதும் குவாட்டர்கள் குமியுமா

ஏற்கனவே தேதி காலாண்டர்களில் இந்துக்கள் பண்டிகைகளை அச்சிட இடம் போதாமல் காலாண்டர் அளவை பெரிதுபடுத்த வேண்டியதாயிருக்கிறது. இந்த லட்சணத்தில் புதியபுதிய கண்டுபிடிப்புகளைப் போட்டு மக்களின் பணத்திற்கு வேட்டு வைக்கிறார்கள். 50 ரூபாய் வாங்கிக்கொண்டு மெடிக்கல் சர்டிபிகேட் தரும் சில டாக்டர்களைப் போல காசுக்காக புதிய மேட்டர்களைப் எடுத்துவிடும் ஜோசியர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இது நல்ல பிஸினஸாக உருவெடுத்து விடுவதால் மற்ற ஜோசியர்களும் இதை கண்டுகொள்ளாமல் வழிமொழிய ஆரம்பித்து விடுகிறார்கள். 

ஒரு நேரத்தில் குஜராத் மாநிலம் சூரத்தில் யாருமே  வாங்காமல் டன் கணக்கில் தேங்கிக்கிடந்த பச்சை சேலைகளை தள்ளிவிடுவதற்குத் அவர்கள்  தேர்தெடுத்தக் களம் தமிழ்நாடு தேர்ந்தெடுத்த கதை நல்லதங்காள். அவர்கள் நினைத்தது போல அந்த பழைய ஸ்டாக்குகள் தீர்ந்தது மட்டுமல்லாமல் அதைவிட பலமடங்கு புதிய ஆர்டர்கள் கிடைத்தது.இன்று வரை தமிழக சகோதரன் தன் சகோதரிக்கு எடுக்கும் சேலை பச்சையாகத் தான் இருக்கும். அது போல சில நாட்களுக்கு முன்பு வீட்டில் தலைப்பிள்ளைக்கு ஆபத்து. அதனால் பச்சரிசி விளக்கு வையுங்கள் என ஒரு செய்தி கிளம்பி அதுவும் ஒரு நல்ல பிஸினஸாக இருந்தது. இதிலிருந்தே தெரியவில்லை அட்சய திருதியை என்பது மக்களின் பணத்திற்கு ஆப்பு வைக்கும் ஒரு வியாபார யுக்தி என்று

திராவிடத் தந்தை அய்யா பெரியார் ஈரோடு மேயராக இருந்த போது அவர்கள் பகுதிக்கு குடிநீர் குழாய் இணைப்புக் கொடுத்தார். அந்தக் குழாய் அரிஜன மக்களின் சேரி வழியாக வருவதால் தீட்டு ஆகிவிட்டது என்று அதற்குப் பரிகாரமாக பைப்பின் மீது புளியைத் தடவினால் அது கழிந்துவிடும் என்று  சொல்லி அதையும் செய்ய ஆரம்பித்தார்கள். அது அப்படியே பரவிப் பரவி பைப்பின் மீது புளிதடவினால் தான் தண்ணீரே வரும் என்று மாறிவிட்டது.

அதைக் கண்ட பெரியார் நம்ம ஆளுங்க "பைப் கண்டு பிடிச்சவன் வந்தாலும் அவனையும் புளி தடவ வச்சிருவாங்க" என்று சொன்னாராம். நல்ல வேளை இன்று பெரியார் உயிரோடு இல்லை. இருந்திருந்தால் இது  டுபாகூர் மேட்டர்களுக்கு மக்கள் தலை சாய்ப்பது கண்டு மீட்டிங்கெல்லாம் போட்டு பேசிக்கொண்டிருக்க மாட்டார். நேரே கைத்தடியோடு ரங்கநாதன் தெருவுக்கு போய் இன்று தங்கம் வாங்க வரும் உடன்பிறப்புகளை விளாசு விளாசுன்னு விளாசியிருப்பார்

நம்ம இவ்ளோ சொல்லியும் சென்னையில் இன்னிக்கு மட்டும்  தங்கம் விற்பனை எவ்ளோ தெரியுமா? விளக்கமான‌ செய்தியைப் பார்க்க இங்கின கிளிக்குங்க‌ 

நல்லா கெளப்புறாங்கேடா பீதிய !!!!!!!!!!!!!!!

5 கருத்துகள்:

ஆலுக்காஸ் ஜுவல்லர்ஸ் சொன்னது…

மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் கேலி செய்யும் டாஸ்மாக் கபாலியை 13ம் வட்ட நகைக்கடைகாரர்கள் சங்கம் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்

Arivazhagan சொன்னது…

Very true. This is nothing but a business trick. Since last year, they went overboard saying one should buy "white" precious metal- platinum or diamond!!
What I wish to ask these bogus astrologers is if I need to buy in white why shouldn't I buy silver ro better still Aluminium?

SUREஷ்(பழனியிலிருந்து) சொன்னது…

கணவன்களுக்கான நீதிக்கதை (அட்சய திரிதியை ஸ்பெஷல்)படித்துவிட்டீர்களா தல

ரங்குடு சொன்னது…

இதெல்லாம் ஒரு சீசன் தான். திருப்பதி சீசன் முன்னாடி இருந்தது. 1970 களில் ஐயப்ப சீசன் பிக் அப் ஆச்சு. அதே மாதிரி மாங்காடு, திருவேற்காடு, பங்காரு அடிகள் என மாறியது. இதெல்லாம் தமிழ் மக்கள் பணம் இல்லாம பன்னாடையாக திரிந்த போது வந்த்வை.

கடந்த சில வருடங்களாகவே நம்ம மக்கள் கையில் அமெரிக்கா பணம், அமீரகப் பணம், ஆஸ்திரேலியப் பணம் என எக்கச்சக்கமா புரள்கிறது.

மக்களும் வெளி நாட்டில் வாழும் தங்கள் செல்வங்கள் அனுப்பிய பணத்தை வீடு,தோட்டம், தங்கமாக மாற்றிக் கொள்ள ஆரம்பித்தனர்.

விஜய தசமி அன்று ஒரு காரியத்தை ஆரம்பித்தால் வெற்றி என்று ஒரு நம்பிக்கை உண்டு. என்னைக் கூட விஜய தசமி அன்று தான் பள்ளியில் சேர்த்தார்கள். இப்போதெல்லாம் அப்படி சேர்த்துப்பாங்களா என்று தெரியாது.

அட்சய திருதியை ஒன்றும் நமது பெரியாரிஸ்டுகள் கூறுவது போல் ஆரியர்கள் கொண்டு வந்ததல்ல. சமணர்களின் (இவர்கள் ஆரியர்கள் அல்லர் என்பது பெரியாரின் சீடர்களுக்குத் தெரியுமா?) ஆதி குருவான விருஷப தேவரின் 6 மாத உண்ணா நோன்புக்குப் பிறகு உணவு ஏற்ற தினமாகும். அவரது பசியைப் போக்கிய அரசனது நாட்டில் பொன்மாரி பொழிந்ததாம். அதனால் அட்சய திருதியை அன்று ஏழைகளுக்கு உணவு அளித்தலே நன்று என்பது பொருள். ஆனால் பொன்மாரி பொழிந்ததை மட்டும் எடுத்துக் கொண்டு, இப்படித் தங்கம் வாங்கத் தவிப்பது பணம் படைத்தவர்களின் பணத்தைப் பிடுங்க தங்க வியாபாரிகள் செய்த வியாபார உத்தி.

இதை ஆரிய மாயை, பார்ப்பன உத்தி என்றெல்லாம் அழைப்பது பெரியாரிஸ்டுகளின் அறிவீனம்.

பெயரில்லா சொன்னது…

அறிவழகன் சொல்வது மிகச்சரி. ரங்குடு சொல்வதிலும் நியாயம் இருக்கிறது. ஆனால் அவர் சொல்லும் சீசன் என்ற வார்த்தை சரியல்ல. அக்ஷய த்ரிதியை அன்று தானம் செய்வது தான் சிறந்தது என்று சொல்லியிருக்கிறது. ஆனால் மக்களின் மூடநம்பிக்கையைப் பயன்படுத்த வேண்டாமா? வாலண்டைன்ஸ் டே மாதிரியான பித்தலாட்டம் தான் இது. இன்னும் வெளிநாடுகளில் பலப்பல பித்தலாட்டங்கள் உண்டு. மதர்ஸ் டே, ஃபாதர்ஸ் டே (எந்த ஃபாதரோ), அண்டர்வேர் டே, இன்னும் பல. எல்லாமும் இங்கேயும் வந்தாலும் வரும். அதான் வந்தாரை வாழ வைக்கும் தமிழகமாச்சே!